சென்னை வந்த விமான இருக்கையில் பதுக்கிய 6 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்: கடத்தல் ஆசாமிக்கு வலை

சென்னை: துபாயிலிருந்து சென்னை வந்த ஏர்இந்தியா விமானத்தில் சீட்டிற்கு அடியில் மறைத்து வைத்திருந்த ரூ.2.9 கோடி மதிப்புடைய 6 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். துபாயிலிருந்து ஏர்இந்தியா சிறப்பு விமானம் நேற்று அதிகாலை சென்னை சர்வதேச விமானநிலையம் வந்தது. அதில் வந்த பயணிகள் அனைவரும் இறங்கி சென்றனர். பின்னர், அந்த விமானம் மீண்டும் உள்நாட்டு விமானமாக சென்னையிலிருந்து டெல்லி புறப்பட்டு செல்ல தயாராக இருந்தது.  இதனால், ஏர்இந்தியா ஊழியர்கள் விமானத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பயணிகள் அமரும் ஒரு சீட் தூக்கிக்கொண்டு உயர்ந்திருந்தது. அதை சரிசெய்ய முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதையடுத்து சீட்டிற்கு அடியில் பார்த்தபோது, வெள்ளை நிற பார்சல் ஒன்று இருந்தது. இதையடுத்து சுத்தப்படுத்தும் பணியை நிறுத்திவிட்டு விமானநிலைய மேலாளருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், விமான பாதுகாப்பு அதிகாரிகள் மெட்டல் டிடெக்டருடன் விரைந்து வந்து சோதனையிட்டனர். அதில் வெடிகுண்டுகள் எதுவும் இல்லை என்று தெரியவந்தது.

பார்சலை பிரித்து பார்த்தபோது உள்ளே தங்கக்கட்டிகள் இருப்பது தெரிந்தது. இதுபற்றி விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து தங்க கட்டிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அந்த பார்சலில் தலா ஒரு கிலோ எடை கொண்ட மொத்தம் 6 தங்க கட்டிகள் இருந்தன. அதன் சர்வதேச மதிப்பு ரூ.2.9 கோடி. இதையடுத்து அந்த தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். விமானத்திற்குள் உள்ள சிசிடிவி பதிவை வைத்து கடத்தல் ஆசாமியை தேடி வருகின்றனர்.

Related Stories:

>