கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட 300 பேருக்கு மீண்டும் வேலை வழங்காமல் அலைக்கழிப்பு

தண்டையார்பேட்டை: சென்னையில் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு ஏற்பட்டபோது வீடு வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் களப்பணியாளர் நியமிக்கப்பட்டு, பணியாற்றி வந்தனர். இவர்களுக்கு மாத சம்பளமாக ₹15 ஆயிரம் வழங்கப்பட்டது. பின்னர் கொரோனா தொற்று குறைந்ததால் அவர்களை பணியில் இருந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் நீக்கிவிட்டனர். தற்போது கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருவதால், தினசரி பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால், கடந்த ஆண்டை போல், மீண்டும் வீடு வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை செய்யும் பணியை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காக, கடந்தாண்டு பணியாற்றிய பெண், ஆண் களப்பணியாளர்கள் மீண்டும் வேலையில் அமர்த்தப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டது. ராயபுரம் மண்டலத்துக்கு உட்பட்ட ராயபுரம், வண்ணாரப்பேட்டை, சவுகார்பேட்டை, கொண்டித்தோப்பு, மண்ணடி, பாரிமுனை, பூக்கடை, சிந்தாதிரிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் 1500 களப்பணியாளர்கள் கடந்த ஆண்டு பணியாற்றினர். தற்போது, இவர்களில் 1200 பேர் மட்டும் மீண்டும் வேலையில் அமர்த்தப்பட்டுள்ளனர். மீதமுள்ள 300 பேருக்கு இதுவரை வேலை வழங்கப்படவில்லை.

இதுகுறித்து களப்பணியாளர்கள் கூறுகையில், ‘ராயபுரம் மண்டலத்தில் கடந்த ஆண்டு கொரோனா தடுப்பு பணியில் 1500 பேர் ஒப்பந்த அடிப்படையில் ஈடுபட்டோம்.  கொரோனா தொற்று குறைந்ததால் எங்களை பணியில் இருந்து நீக்கிவிட்டனர். தற்போது கொரோனாவின் 2வது அலை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில், ஏற்கனவே கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட 1500 களப்பணியாளர்கள் மீண்டும் வேலையில் அமர்த்தப்படுவார்கள் என சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவித்திருந்தார். ஆனால், 1200 பேர் மட்டுமே வேலையில் அமர்த்தப்பட்டுள்ளனர். மீதமுள்ள 300 பேருக்கு வேலை வழங்கப்படவில்லை. அதிகாரிகளுக்கு வேண்டியவர்கள், உறவினர்களுக்கு மீண்டும் வேலை வழங்கியுள்ளனர். ஏற்கனவே பணியாற்றிய எங்களை வேலையில் சேர்க்காமல் அலைக்கழித்து வருகின்றனர்.  மேலும் கடந்தாண்டு பணியாற்றியவர்களுக்கு மாத சம்பளமாக 15 ஆயிரம் வழங்கப்பட்டது. தற்போது 12 ஆயிரம் வழங்கப்படுகிறது. எனவே, இந்த பிரச்னையில் சென்னை மாநகராட்சி ஆணையர் தலையிட்டு எங்களுக்கு வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

Related Stories: