×

ரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்பெருமாள் கோடைதிருநாள் துவக்கம்

மண்ணச்சநல்லூர்,ஏப்,18: ரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை மாதம் நடைபெறும் நம்பெருமாள் கோடை திருநாள்(பூச்சாற்று உற்சவம்) வெளிக்கோடை, உள்கோடை என தலா 5 நாட்கள் வீதம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.இந்தாண்டிற்கான நம்பெருமாள் வெளிக்கோடை திருநாள் நேற்று மாலை தொடங்கி வரும் 21ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. வெளிக்கோடை திருநாளின் முதல் நாளான நேற்று இரவு 7 மணிக்கு உற்சவர் நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு வெளிக்கோடை நாலுகால் மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கு புஷ்பம் சாத்துப்படி கண்டருளினார். பின்னர் அங்கிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். இந்த பூச்சாற்று உற்சவத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். வெளிக்கோடை திருநாளை முன்னிட்டு இரவு 8 மணிக்கு மேல் மூலவர் சேவை கிடையாது.

நம்பெருமாள் உள்கோடை திருநாள் வரும் 22ம்தேதி தொடங்கி 26ம்தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. உள்கோடை திருநாளின் போது தினமும் இரவு 7 மணிக்கு உற்சவர் நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு உள்கோடை நாலுகால் மண்டபத்திற்கு வந்து சேர்வார். அங்கு புஷ்பம் சாத்துப்படி கண்டருளுவார். பின்னர் அங்கிருந்து இரவு 9.30 மணிக்கு வீணை வாத்யத்துடன் புறப்பட்டு இரவு 10 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். உள்கோடை திருநாளை முன்னிட்டு இரவு 7.45 மணிக்கு மேல் மூலஸ்தான சேவை கிடையாது.வரும் 21ம் தேதி ராமநவமியையொட்டி பகல் 2.30 மணி முதல் மாலை 6 மணிவரை நம்பெருமாள் சேரகுலவள்ளி தாயார் சேர்த்தி சேவை நடைபெற உள்ளது. வரும் 27ம் தேதி சித்ரா பவுர்ணமி அன்று கஜேந்திரமோட்ச புறப்பாடு நடைபெறுகிறது.

Tags : Namperumal Summer Festival ,Aurangam Ranganathar Temple ,
× RELATED ரங்கம் ரங்கநாதர் கோயிலில் தெப்பத்திருவிழா