காந்திமார்க்கெட்டில் இரவில் துவங்கி அதிகாலை வரை மொத்த விற்பனை

திருச்சி, ஏப். 18: திருச்சி காந்தி மார்க்கெட்டில் சுயக்கட்டுப்பாடாக பகல் நேரங்களில் காய்கறி சில்லரை விற்பனையை கைவிட்ட வியாபாரிகளால், காந்திமார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டு வருகிறது. திருச்சியில் கொரோ னா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. இதைத்தடுக்கும் வகையில் மக்கள் அதிகம் கூடும் காந்தி மார்க்கெட்டில் சில்லரை வியாபாரத்துக்கு அரசு தடை விதித்தது. அதற்கு பதிலாக பொன்மலை ஜி.கார்னர் மைதானத்தில் தற்காலிக கடைகளை அமைத்து சில்லரை வியாபாரத்தை நடத்திக்கொள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. அதன்படி, ஏப். 13ம் தேதி இரவு முதல் சில்லரை வியாபார கடைகள் ஜி.கார்னருக்கு செல்ல வேண்டும். ஆனால் நேற்று வரை அவர்கள் அங்கு செல்லாமல் தொடர்ந்து காந்தி மார்க்கெட்டிலேயே வியாபாரம் செய்து வருகின்றனர். மேலும் மொத்தவியாபாரிகள், சிறு மொத்த சில்லரை வியாபாரிகள் என இரு தரப்பினரும், காந்தி மார்க்கெட்டிலே இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

அதன்படி நேற்றிரவு வழக்கம்போல் வியாபாரம் நடந்தது. தங்களது கோரிக்கையின்படி சுயக்கட்டுப்பாடோடு இரவு 10 மணிக்கு மொத்த வியாபாரத்தை துவக்கி, அடுத்த நாள் காலை 6 மணியுடன் வியாபாரத்தை முடித்துக்கொண்டு வெளியேறி வருகின்றனர்.  இதனால் காந்திமார்க்கெட் பகல் நேரங்களில் காய்கறி விற்பனையின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் மொத்த காய்கறிகளுக்கு லோடு இறக்குவதற்காக திறக்கப்படும் 1 முதல் 6 கேட்டுகள் பகல் முழுவதும் பூட்டப்பட்டிருந்தது. மார்க்கெட்டில் மளிகை கடை, பூக்கடைகள் மட்டுமே இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் நள்ளிரவு 1.30 மணி வரை போலீஸ் பாதுகாப்புடன் 218 வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை முடிவில் அதிகளவில் கொரோனா தொற்று இருந்தால் காந்திமார்க்கெட் மூடப்படலாம் என்ற தகவல் பரவிவருகிறது. இது குறித்து மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியனிடம் கேட்டபோது, பகலில் காய்கறி விற்பனை நடக்கக்கூடாது என்பது எங்களின் கோரிக்கை, தற்போது வியாபாரிகளாகவே இரவில் விற்பனையை தொடங்கி அதிகாலையில் கடையை மூடிவிடுகின்றனர்.

காலை நேரங்களில் அங்கு காய்கறி விற்பனைகள் நடக்கவில்லை. இதனால் பொதுமக்கள் அதிகளவில் காந்திமார்க்கெட்டில் கூடுவது தவிர்க்கப்பட்டுள்ளது. இதுவே சமூக இடைவெளிக்காக மாநகராட்சி நிர்வாகம் போராடியதற்கு கிடைத்த வெற்றிதான். மேலும் கோவிட் டெஸ்ட் பரிசோதனைகள் முடிவுகளை பொறுத்து, மாவட்ட நிர்வாகத்துடன் கலந்து அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Related Stories: