வலங்கைமான் போலீசாரை கண்டித்து கருப்பு கொடி கட்டி திமுகவினர் எதிர்ப்பு

வலங்கைமான், ஏப்.18: வலங்கைமான் அடுத்த ஆலங்குடி கடைவீதியில் வலங்கைமான் காவல் துறையை கண்டித்து கருப்பு கொடி கட்டி பிளக்ஸ் பேனர் வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆலங்குடி ஊராட்சி மன்ற தலைவராக திமுகவை சேர்ந்த வக்கீல் மோகன் உள்ளார். அதே பகுதியில் அதிமுக ஊராட்சி செயலாளராக துரைராஜன் உள்ளார். கடந்த 6ம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் இறுதிகட்ட பிரசாரத்தின்போது ஆலங்குடி கடைவீதியில் திமுக மற்றும் அதிமுகவினரிடையே வாய்த் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. இதுகுறித்து இரண்டு தரப்பினரும் வலங்கைமான் காவல் நிலையத்தில் தனித்தனியே கொடுத்த புகாரின் பேரில் ஆலங்குடி ஊராட்சி மன்ற தலைவர் வக்கீல் மோகன் மற்றும் அதிமுக ஊராட்சி செயலாளர் துரைராஜன் ஆகிய இருவர் மீதும் ஆபாசமாக பேசுதல் தனிமனித விமர்சனம் செய்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று காலை ஆலங்குடி கடைவீதியில் கடைகள் தோறும் கருப்பு கொடி கட்டப்பட்டிருந்தது.

மேலும் ஆலங்குடி காமராஜர் காலனி திமுக என்ற பெயரில் ஆலங்குடி ஊராட்சி மன்ற தலைவர் வக்கீல் மோகன் மீது பொய் வழக்கு போட்டு மனித உரிமையினை மீறும் வலங்கைமான் காவல்துறையை கண்டிக்கிறோம் என்ற பிளக்ஸ்போர்டும் வைக்கப்பட்டிருந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது சம்பவ இடத்திற்கு வந்த வலங்கைமான் இன்ஸ்பெக்டர் விஜயா அங்கிருந்த திமுகவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி பிளக்ஸ்போர்டை அப்புறப்படுத்தினார்.

கடைவீதியில் கட்டப்பட்டிருந்த கருப்பு கொடிகளையும் போலீசார் அப்புறப்படுத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்பத்தி உள்ளது.

Related Stories:

>