×

கொரோனா வழிகாட்டு நெறிமுறை கடைபிடிக்கப்படுகிறதா? அதிகாலை ஆய்வு செய்த அதிகாரிகள்

தஞ்சை, ஏப்.18: தஞ்சாவூர் காய்கறி சந்தையில் அதிகாலை நான்கு மணி நேரம், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா என வருவாய் கோட்டாட்சியர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகம் பரவி வருகிறது. இந்நிலையில் தஞ்சாவூர் காமராஜர் மொத்த மற்றும் சில்லரை தற்காலிக காய்கறி சந்தையில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை வியாபாரிகள் கடைபிடிக்கிறார்களா என தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் வேலுமணி, மாநகராட்சி ஆணையர் ஜானகிரவீந்திரன் ஆகியோர் நேற்று அதிகாலை 2 மணியிலிருந்து காலை 6 மணி வரை நான்கு மணி நேரம் சந்தையில் ஆய்வு செய்தனர். அப்போது வியாபாரிகள் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிந்துள்ளார்களா எனவும் பார்வையிட்டனர். மேலும் சந்தையில் சங்க நிர்வாகிகளிடம் எவ்வளவு பேர் சந்தைக்கு வருகிறார்கள், இதில் வியாபாரிகள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டார்களா எனவும் கேட்டறிந்தனர். மேலும், ஒவ்வொரு பகுதியாக சென்று ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட காய்கனி வர்த்தகர்கள் சங்கத்தின் பொருளாளர் சிதம்பரம் கூறியதாவது: தஞ்சாவூர் காமராஜர் சந்தையில் 94 மொத்த வியாபாரிகளும், 220 சில்லரை வியாபாரிகளும் உள்ளனர். இங்கிருந்து மாவட்டம் முழுவதும் காய்கறிகள் வாங்கிச் சென்று சில்லரையிலும் வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர். தற்போது கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால், சமூக இடைவெளி, முகக்கவசம் அணிந்து வியாபாரிகளும், பொதுமக்களும் வருகிறார்கள் என அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும், வியாபாரிகள் கோரிக்கையை ஏற்று ஒரிரு தினங்களில் சந்தையிலேயே முகாம் அமைத்து தடுப்பூசி போட நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர் என்றார்.

Tags : Corona ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...