×

குதிரைக்கு குடல்கற்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்

தஞ்சை, ஏப்.18: ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வயிற்று வலியால் அவதிப்பட்ட குதிரைக்கு குடற்கற்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் 6 வயதான பந்தய ஆண் குதிரையை வளர்த்து வருகிறார். இந்நிலையில் இக்குதிரை வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தது. இதையடுத்து ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கடந்த 8ம் தேதி பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்டது. குதிரையை பரிசோதித்த மருத்துவர்கள் குதிரைக்கு தொடர் வயிற்று வலி மற்றும் குடல் அடைப்பு ஏற்படுத்தும் குடற்கல் இருப்பது கண்டறிந்தனர். இதையடுத்து குடற்கல் அறுவை சிகிச்சை மூலம் அகற்ற முடிவு செய்யப்பட்டன. கல்லூரி முதல்வர் சிவகுமார் வழிகாட்டுதலின்படி கால்நடை மருத்துவர்கள் செந்தில்குமார், குமரேசன், தமிழ்மகன் ஆகியோர் அடங்கிய அறுவை சிகிச்சை குழு குடல் அடைப்பு ஏற்படுத்திய 5 இன்ச் நீளமுள்ள குடற்கல்லை அகற்றினர். தொடர் கண்காணிப்பு மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டதில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட குதிரை பூரண குணம் அடைந்தது.

இது பற்றி கல்லூரி முதல்வர் சிவகுமார் கூறும்போது, குதிரைகளில் குடல் அறுவை சிகிச்சை மிகவும் சிக்கல் மற்றும் சவால்கள் நிறைந்தது. இத்தகைய பாதிப்புகளை தவிர்க்க குதிரை வளர்ப்போர் குதிரைகள் உட்கொள்ளும் உணவு பொருட்களில் பிளாஸ்டிக் பொருட்கள் இல்லாமல் பார்த்துக் கொள்வது அவசியம். ஜசோபுலுரேன் கொண்டு பேணப்பட்ட முழு மயக்க நிலையில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மூலம் குடற்கல் ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அகற்றப்பட்டது இதுவே முதல் முறை என்றார்.

Tags :
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு