×

அறந்தாங்கி அருகே ஆற்றை தூர்வார கோரி மக்கள் சாலை மறியல்

அறந்தாங்கி, ஏப்.18: புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் அருகே உள்ள அய்யம்பட்டினம் கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் உள்ளன. புயல் மட்டும் பேரிடர் காலங்களில் பலகைகளை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டுசெல்ல அப்பகுதியில் ஒரு ஆறு உள்ளது. அந்த ஆறு சரிவர தூர்வாரப்படாததால் படகுகளை நிறுத்தி வைக்க முடியாத சூழல் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் ஆற்றை தூர்வார கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனையடுத்து கடந்த மாதம் ஆற்றை தூர்வார கோரி அப்பகுதி கிராம மக்கள் ரேஷன் கார்டு மற்றும் ஆதார் கார்டுகளை மணமேல்குடி தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைக்கும் போராட்டம் நடைபெற்றது. அப்போது விரைவில் ஆற்றை தூர்வாரி தரப்படும் என்று கூறப்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து அப்போது போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

இதனையடுத்து நாட்கள் பல ஆகியும் தூர்வாரும் நடவடிக்கை இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் நேற்று கிழக்கு கடற்கரை சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவம் அறிந்த கோட்டைபட்டினம் டிஎஸ்பி சிவராமன், இன்ஸ்பெக்டர் சாமுவேல் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தைக்கு அவர்கள் உடன்படவில்லை இதனையடுத்து போலீசார் அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது அவர்கள் தங்கள் ரேஷன் கார்டு மற்றும் ஆதார் கார்டுகளை சாலையில் தூக்கி எறிந்தனர். கூட்டத்தில் சிலர் தங்கள் உடலில் டீசலை ஊற்றிக் கொண்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. பின்னர் அவர்கள் மீது போலீசார் தண்ணீரை ஊற்றினர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு மணமேல்குடி தாசில்தார் ஜமுனா வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இரண்டு நாட்களில் இதற்கு சுமூகமான முடிவு எடுக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்தார். அதன்பேரில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியல் போராட்டம் சுமார் மூன்று மணி நேரம் தொடர்ந்ததால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிப்படைந்தது. பின்னர் போலீசார் வாகனத்தை வேறு வழியில் திருப்பி விட்டனர்.

Tags : Aranthangi ,
× RELATED கடத்தப்பட்ட அரசு பஸ் விபத்தில் சிக்கியது