காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் பெரம்பலூர் கலெக்டரிடம் கோரிக்கை மனு

பெரம்பலூர், ஏப் 18: பெரம்பலூரில் நடைபாதை வியாபாரிகளை மிரட்டும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்ககோரி கலெக்டரிடம் மனு கொடுத்தனர். பெரம்பலூர் அம்பேத்கர் நடைபாதை தள்ளுவண்டி வியாபாரிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபாதை வியாபாரிகள் மாவட்ட கலெக்டரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணியின் பெரம்பலூர் நகர நடைபாதைகள் வியாபாரிகள் சங்கத்தில் 75க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளோம். இந்த சங்கத்தின் உறுப்பினர்கள் தள்ளுவண்டியில் வியாபாரம், தலைச்சுமை வியாபாரம், தெருவோரக் கடைகள் நடத்தி அன்றாடம் ஜீவனம் செய்து வருகிறோம். இந்நிலையில் கடந்த 15ம் தேதி பெரம்பலூர் நகர காவல் நிலையத்தில் இருந்து வந்த அதிகாரி ஒருவர் தள்ளுவண்டியில் பிரியாணி வியாபாரம் செய்து வரும் ஒருவரிடம் இடத்தை காலி செய்ய வேண்டும். இல்லை என்றால் நாங்களே கடையை காலி செய்து காய்லான் கடையில் போட்டுவிடுவோம்.

காலி செய்யவில்லை என்றால் பொய் வழக்கு போட்டு உள்ளே தள்ளி விடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் எங்களுடைய அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை உரிமையை பறிக்கும் காவல் அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும், எங்கள் வியாபாரத்தை இடையூறு இல்லாமல் வியாபாரம் செய்ய எங்களுக்கு வழிவகை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More