நடிகர் விவேக் மறைவு அனைத்து ரசிகர் மன்றம் அஞ்சலி

பெரம்பலூர், ஏப்.18: பெரம்பலூரில் நடிகர் விவேக் மறைவிற்கு அனைத்து ரசிகர்கள் மற்றும் இளைஞர்கள் மெழுகுவரத்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். பெரம்பலூர் காமராஜர் வளைவு பகுதியில், அனைத்து ரசிகர்கள் மன்றம் சார்பில் மறைந்த நடிகர் விவேக் உருவ படத்துக்கு மலர் வளையம் வைத்து, மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. பெரம்பலூர் இளைஞர்கள் இயக்கம் சார்பில், அதன் ஒருங்கிணைப்பாளர் சத்யா தலைமையில் முத்து நகரில் விவேக் உருவ படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு 100 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. மேலும், சாலையரத்தில் 20-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. இதேபோல் பெரம்பலூர், துறைமங்கலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவரது ரசிகர்கள் மரக்கன்றுகள் நட்டு அஞ்சலி செலுத்தினர். பாடாலூர்: ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் கிராமத்தில் மறைந்த நடிகர் விவேக் நினைவை போற்றும் விதமாக நாட்டார்மங்கலம் நம்மால் முடியும் இளைஞர்கள் குழு சார்பாக மரக்கன்றுகள் நட்டு வைத்து அஞ்சலி செலுத்தினர். மறைந்த நடிகர் விவேக் மரங்களை வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தார். மேலும் சுற்றுச்சூழல் குறித்த பல்வேறு விழிப்புணர்வு கருத்துகளை எடுத்துரைத்தார். இதனிடையே அவருடைய நினைவு போற்றும் விதமாக நாட்டார்மங்கலம் கிராமத்தில் நம்மால் முடியும் இளைஞர்கள் பயன்தரக் கூடிய நாவல், வேம்பு பூவரசு, புங்கை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாட்டு மரங்களை பள்ளிக்கூடம், அங்கன்வாடி,கோயில்கள் முன்பு ஏரிக்கரை பகுதிகளில் நட்டு வைத்து தங்களுடைய அஞ்சலியை செலுத்தினர். தா.பழூர்: நகைச்சுவை நடிகர் விவேக் மாரடைப்பால் இறந்ததையொட்டி அவரது நினைவாக அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள உதயநத்தம் கிராமத்தில் இளைஞர்கள் அரசு மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டனர்.

Related Stories:

More