சேதமான குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்யாமல் குச்சியால் தடுப்பு அமைப்பு வாகன ஓட்டிகள் கடும் அவதி

பெரம்பலூர், ஏப்.18: பெரம்பலூர்- துறையூர் சாலையில் குடிநீர் குழாய் சரிசெய்யும் பணியை முழுமையாக முடிக்காமல் பாதியளவுக்கு சாலையில் தடுப்பு அமைத்ததால் வாகன ஓட்டிகள் செல்லமுடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

பெரம்பலூரில் இருந்து துறையூர் செல்லும் சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பஸ்கள், லாரிகள், கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. அந்த சாலையின் அடியில் செல்லும் குடிநீர் குழாய் பழுதடைந்துள்ளது. அந்த குடிநீர் குழாயை உடனடியாக சரி செய்து நடவடிக்கை எடுக்காமல் குழாய் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. பெரம்பலூரில் இருந்து துறையூர் செல்லும் சாலை மிகவும் முக்கியமானதாக விளங்கி வருகிறது. இந்த சாலையின் நடுவில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளதால் பஸ்கள், லாரிகள், கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் செல்வதில் சிரமமாக உள்ளது. மிகவும் போக்குவரத்து நிறைந்த காலை மற்றும் மாலை நேரங்களில் அதிகளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சூழ்நிலையில் இரு பக்கங்களில் இருந்து வாகனங்கள் செல்லும்போது வாகன ஓட்டிகளுக்கு மிகவும் சிரமம் ஏற்படுகிறது. மேலும் இதனால் அதிகமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நின்று செல்லக்கூடிய நிலைமை ஏற்படுகிறது. இந்த சாலையில் அதிகளவில் தனியார் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் சென்று வருகின்றன. அந்த போக்குவரத்து நெரிசல் நேரங்களில் அந்த தடுப்பு அமைக்கப்பட்டுள்ள இடத்தில் வாகனங்கள் செல்லும்போது விபத்து ஏற்படும் அபாய சூழ்நிலை உள்ளது. எனவே பெரம்பலூர்-துறையூர் போக்குவரத்திற்கு முக்கியமாக கருதப்படும் இந்த சாலையில் வாகன ஓட்டிகளின் நலன் கருதி குடிநீர் குழாயை உடனடியாக சரி செய்து தடுப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories:

More