குளித்தலை நகராட்சி பகுதியில் தெரு நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரிப்பு

குளித்தலை, ஏப்.18: குளித்தலை நகராட்சியில் தெரு நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரிப்பதால் பொதுமக்கள் அச்சத்துடன் செல்கின்றனர். கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளது. இதில் பெரிய பாலம், வைசியாள் தெரு, மாரியம்மன் கோயில் பஜனை மடம், கடைவீதி, காந்தி சிலை, கடம்பர் கோவில், வைகநல்லூர், அக்ரஹாரம் பெருமாள் கோவில், சுங்ககேட், மனத்தடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளது. இப்பகுதியில் தினந்தோறும் உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து வங்கி, மருத்துவம் மற்றும் சொந்த பணிகளுக்காகவும் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் குளித்தலை நகராட்சி பகுதியில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. கும்பல் கும்பலாக சாலையில் திரிவதால் பொதுமக்கள் சாலையில் செல்ல அச்சப்படுகின்றனர். கூட்டமாக வரும் தெரு நாய்கள் திடீரென ஒன்றுக்கொன்று சாலையில் சண்டையிட்டுக் கொள்ளும் போது, எதிர்பாராவிதமாக குழந்தைகளும், முதியவர்களும் இடையில் மாட்டிக்கொண்டு பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்நிலை தொடர்ந்து குளித்தலை நகரத்தில் நடைபெற்று வருகிறது. மேலும் கூட்டமாக வரும் தெருநாய்களின் வெறி நாயும் சேர்ந்து கொண்டு உலா வருவதால் எந்த நாய் கடிக்கும் என அச்சத்துடனே பொதுமக்கள் சாலையில் கடந்து செல்கின்றனர். இந்நிலையை போக்க நகராட்சி துப்புரவு ஆய்வாளர் அவர்கள் உடனே நடவடிக்கை எடுத்து குளித்தலை நகரப்பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரியும் தெரு நாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகர பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: