கொரோனா பரவல் தடுப்பு சிகிச்சைக்காக தென்காசி மாவட்டத்தில் 550 படுக்கை வசதிகள் தயார்

தென்காசி, ஏப்.17: தென்காசி கலெக்டர் அலுவலக வளாகத்தில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்பில் கொரோனா வைரஸை தடுக்கும் விதமாக கபசுரக் குடிநீர் பொதுமக்கள், அலுவலர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

கலெக்டர் சமீரன், அரசு அலுவலர்கள், பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கி துவக்கி வைத்து பேசுகையில், கொரோனா வைரஸ் 2ம் அலை வேகமாக பரவி வருவதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தென்காசி மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக கபசுர குடிநீர் வழங்கும் முகாம் துவக்கி வைக்கப்பட்டது. இந்த முகாம் கொரோனா கட்டுப்பாட்டு பகுதியில் பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினர் மற்றும் அனைவருக்கும் வழங்கும் விதமாக மாவட்டம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஊரக மற்றும் நகராட்சி பகுதிகளிலும், வணிக வளாகங்கள் பொதுமக்கள் கூடும் இடங்களிலும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பு முகாம்களில்  பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. தற்பொழுது பரிசோதனைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. முன்பு நாளொன்றுக்கு 600 முதல் 700 வரை பரிசோதனை செய்யப்பட்டது. தற்போது 1200 பேருக்கு பரிசோதனை எடுக்கப்படுகிறது. முகக்கவசம் அணிவது தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தமிழக எல்லைப்பகுதியான புளியரை சோதனைச்சாவடியில் 24 மணிநேரமும் கண்காணிக்கும் விதமாக சாவடிகள் இயங்கும். வாகனங்களில் வரும் அனைவரும் பரிசோதனை கருவி மூலம் பரிசோதித்து சந்தேகத்திற்குரியவர்கள், வெளியூர் பயணிகள் கண்டறியப்பட்டால் கொரோனா டெஸ்டுக்கு உட்படுத்தப்படுவர். இதுவரை 45,308பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக முகக்கவசம் அணியாதவர்கள், வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் மீது சுகாதாரத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சி அமைப்புகள் ஒருங்கிணைந்து அபராதம் விதிக்கப்பட்டுவதால் தற்போது விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு அனைவரும் முகக்கவசம் அணிந்து வருகிறார்கள். இதனால் அபாராத விகிதமும் குறைந்துள்ளது.

கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் தென்காசி அரசு மருத்துவமனையில் 100 படுக்கை வசதிகளும், புளியங்குடியில் 30ம், சங்கரன்கோவிலில் 35ம், கடையநல்லூரில் 20ம், மேலும், ஆலங்குளம் சர்தார் ராஜா பொறியியல் கல்லூரி, நல்லமணி யாதவா கல்லூரி, பராசக்தி மகளிர் கல்லூரி, சங்கரன்கோவில் மகாத்மா, வேல்ஸ் வித்யாலயாவில் 100 படுக்கை வசதிகளுடன் மொத்தம் 550 படுக்கை வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.  தற்போது 67பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.இம்முறை தென்காசி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து தடையில்லா ஆக்ஸிஐன் வழங்குவதற்கு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் ஆய்வகத்தின் மூலம் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது சங்கரன்கோவிலில் பரிசோதனை ஆய்வகம் அமைக்க முன்னேற்பாடுகள் நடந்து வருகிறது.

கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளான தென்காசி, கடையநல்லூர், ஆலங்குளம் தலா 2 பகுதிகளிலும், சங்கரன்கோவிலில் 1 பகுதிகள் ஆகிய 7 பகுதிகளிலும் கொரோனா கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி கட்டுபாடுகள் மற்றும் தளர்வுகள் மேற்கொள்ளப்படும் என்றார். நிகழ்ச்சியில் மாவட்ட சித்தா அலுவலர் உஷா, மருத்துவர்கள் மேனகா (இயற்கை யோகா மருத்துவம்), செல்வகணேஷ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் கவிதா, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

Related Stories: