சேலம் மாவட்டத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் கேமராக்கள் பொருத்தம்

சேலம், ஏப்.18: சேலம் மாவட்டத்தில் உள்ள 4 வாக்கு எண்ணும் மையங்களிலும் கூடுதல் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. வேட்பாளர்களின் முகவர்கள், 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த 6ம் தேதி நடந்து முடிந்த நிலையில், வாக்கு இயந்திரங்கள் அனைத்தும், 75 வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதியின் வாக்குகள், 4 மையங்களில் எண்ணப்படவுள்ளது. இதன்படி, சேலம் வடக்கு, சேலம் மேற்கு, ஓமலூர், மேட்டூர் ஆகிய 4 தொகுதியின் வாக்கு இயந்திரங்கள் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. சேலம் தெற்கு, ஏற்காடு, வீரபாண்டி ஆகிய 3 தொகுதிகளின் வாக்கு இயந்திரங்கள் அம்மாபேட்டை கணேஷ் கல்லூரியிலும், கெங்கவல்லி, ஆத்தூர் தொகுதி வாக்கு இயந்திரங்கள் தலைவாசல் மணிவிழுந்தான் மாருதி பாலிடெக்னிக் கல்லூரியிலும், இடைப்பாடி, சங்ககிரி தொகுதி இயந்திரங்கள், வீராச்சிபாளையம் விவேகானந்தா மகளிர் கல்லூரியிலும் வைக்கப்பட்டுள்ளது.

இந்த 4 வாக்கு எண்ணும் மையங்களிலும், ஸ்டிராங் ரூமில் வாக்கு இயந்திரங்களை வைத்து சீல் வைத்துள்ளனர். துணை ராணுவம், ஆயுதப்படை போலீசார், உள்ளூர் போலீசார் என 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஸ்டிராங் ரூமிற்கு செல்லும் வழி மற்றும் அறையின் முன் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிப்பு அறையில் இருந்தபடி பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை 24 மணி நேரமும் வேட்பாளர்களின் முகவர்கள் பார்த்து, கண்காணிக்கின்றனர். சுழற்சி முறையில் அனைத்து வேட்பாளர்களின் முகவர்களும் வாக்கு இயந்திரங்களின் பாதுகாப்பை பார்வையிடுகின்றனர்.

இந்நிலையில், வாக்கு எண்ணும் மையங்கள் உள்ள இடங்களுக்கு சந்தேகப்படும் படி கண்டெய்னர் லாரிகள் வருகிறது. இதுதொடர்பாக திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அனைத்து வாக்கு எண்ணும் இயந்திரத்தின் நுழைவுவாயில் பகுதியில் கூடுதலாக சிசிடிவி கேமராக்கள் அமைத்து கண்காணிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்பேரில் அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலர்கள், கூடுதல் கண்காணிப்பு கேமராக்களை அமைத்து வருகின்றனர்.

ஆத்தூர் மணிவிழுந்தான் மாருதி பாலிடெக்னிக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில், நுழைவுவாயில் பகுதியில் கூடுதலாக 4 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டது. இதேபோல், கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் நுழைவுவாயில் பகுதியில் கூடுதலாக 9 சிசிடிவி கேமராக்களும், கணேஷ் கல்லூரியில் 4 கேமராக்களும், வீராச்சிபாளையம் விவேகானந்தா மகளிர் கல்லூரி மையத்தில் கூடுதலாக 2 சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமராக்களில் பதிவாகும் கட்சிகளையும் வேட்பாளர்களின் முகவர்கள் கண்காணிக்கின்றனர். இதனிடையே நேற்று முன்தினம், கணேஷ் கல்லூரி மையத்தில் கேமரா காட்சிகளை பதிவு செய்யும் கருவியின் பேட்டரி பழுதானது. அதனை உடனே மாற்ற கலெக்டர் ராமன் நடவடிக்கை எடுத்தார். அதன்படி வேட்பாளர்கள் முன்னிலையில், அந்த பேட்டரியை மாற்றி முறையாக கேமரா பதிவுகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த மையத்தில் 24 மணி நேரமும் வேட்பாளர்களின் முகவர்கள் கண்காணிப்பில் உள்ளனர்.

Related Stories:

>