வயல்களில் நீர் புகுந்து பருத்தி செடிகள் அழுகல்

இடைப்பாடி, ஏப்.18: இடைப்பாடி சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் வயல்களில் தண்ணீர் தேங்கி, பருத்தி செடிகள் அழுகத்துவங்கி உள்ளது. இதனால் வேதனையடைந்த விவசாயிகள், உரிய இழப்பீடு பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இடைப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து இரவு நேரங்களிலும் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கையாக, கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப் படுவதால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். நேற்றும் கனமழை பெய்ததால், நாச்சூர் சுடுகாடு பாலம், குரும்பப்பட்டி ஆகிய பகுதிகளில் வயல்களில் தண்ணீர் தேங்கியது. இங்கு சாகுபடி செய்யப்பட்டிருந்த பருத்தி செடிகள், அழுகி வீணாக துவங்கியுள்ளது. தவிர, கரும்பு, வாழை மற்றும் பப்பாளி மரங்கள் முறிந்து சேதமடைந்தது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வேளாண் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, உரிய இழப்பீடு பெற்றுத்தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories:

>