வீடுகளுக்குள் அட்டகாசம் செய்த குரங்கு பிடிபட்டது

வாழப்பாடி, ஏப்.18: வாழப்பாடியில் கடந்த 15 நாட்களாக வீடுகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்த குரங்கை, கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினர் கோதுமலையில் விடுவித்தனர். வாழப்பாடி பேரூராட்சி எழில் நகர் பகுதியில், சுமார் ஆயிரம் வீடுகள் உள்ளன. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து உணவு, தண்ணீர் தேடி வந்த குரங்கு ஒன்று இப்பகுதியில் கடந்த 15 நாட்களாக வீடுகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்துவந்தது. இதை விரட்டிய மக்களை பயமுறுத்தியும் வந்தது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள், இதுகுறித்து வாழப்பாடி வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். வாழப்பாடி வனசரக அலுவலர் துரைமுருகன் தலைமையில் வனவர் ருக்மணி, சீனிவாசன், வனகாப்பாளர் ஜெயக்குமார், வன காவலர் தியாகராஜன் அடங்கிய குழுவினர், இப்பகுதியில் கடந்த 7 நாட்களாக கூண்டு வளையம் வைத்தனர். இந்நிலையில் நேற்று, அட்டகாசம் செய்து வந்த குரங்கு கூண்டில் சிக்கியது. இதையடுத்து அந்த குரங்கை பாதுகாப்பாக எடுத்துச்சென்று கோதுமலை வனப்பகுதியில் விடுவித்தனர். இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

Related Stories: