தடுப்பூசி பற்றாக்குறையால் வெறிச்சோடிய சுகாதார மையம்

நாமக்கல், ஏப்.18: தடுப்பூசி பற்றாக்குறையால் நாமக்கல் சுகாதார மையம் வெறிச்சோடியது. நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் தினந்தோறும் அதிகரித்து வருகிறது. இதையொட்டி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை சுகாதாரத்துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள். 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி கடந்த இரு வாரமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் போடப்பட்டு வருகிறது. இந் நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தடுப்பூசிக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தடுப்பூசி மையங்கள் வெறிச்சோடி காட்சி அளிக்கிறது. நாமக்கல் நகரில் கோட்டை அரசு ஆரம்ப சுகாதாரநிலையம், அரசு மருத்துவமனை என இரண்டு இடங்களில் தடுப்பூசி போடப்படுகிறது.நேற்று காலை கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு 40 டோஸ் மட்டுமே தடுப்பூசி வந்தது. இவை முதலில் வந்தவர்களுக்கு போடப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த சுகாதார ஊழியர்கள், தடுப்பூசி ஸ்டாக் இல்லை என பொதுமக்களிடம் கூறினார்கள். இதனால் சுகாதார மையம் வெறிச்சோடியது. இதே நிலை தான் நேற்று நாமக்கல் அரசு மருத்துவமனையிலும் நிலவியது. நேற்று முன்தினம் 100 டோஸ் சேலத்தில் இருந்து  கொண்டுவரப்பட்டது. அவை நேற்றுமுன்தினம் மாலையே பொதுமக்களுக்கு போடப்பட்டு விட்டது, இதனால் நேற்று காலை யாருக்கும் தடுப்பூசி போடவில்லை.

Related Stories:

>