தண்ணீர் தொட்டியை தேடி வரும் வனவிலங்குகள்

தேன்கனிக்கோட்டை, ஏப்.18: தேன்கனிக்கோட்டை அருகே வனப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளில் வன விலங்குகள் தாக சாந்திக்காக குவிந்து வருகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டம்,  தேன்கனிக்கோட்டை, தளி, அஞ்செட்டி மற்றும் உரிகம் வனப்பகுதிகளில் யானை, சிறுத்தை, கரடி, மான், காட்டெருது உள்ளிட்ட வனவிலங்குகள் ஏராளமாக உள்ளன. கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் வனப்பகுதியில் உள்ள நீர்நிலைகள் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளது. இதனால்,  தண்ணீர், உணவு தேடி யானை, மான், காட்டெருதுகள் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் சர்வ சாதாரணமாக நடமாடுவது வாடிக்கையாக உள்ளது. வனவிலங்குள் காட்டை விட்டு வெளியே வருவதை தடுக்கும் வகையில் வனத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். தேன்கனிக்கோட்டை, தளி, அஞ்செட்டி, ஜவளகிரி, உரிகம் வனப்பகுதிகளில் ஆங்காங்கே தொட்டிகள் அமைத்து டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் நிரப்பும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அந்த தொட்டிகளில் யானை, காட்டெருது, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீர் குடித்து விட்டு செல்கின்றன. குறிப்பாக இரவு நேரத்தில் அதிகளவிலான விலங்குகள் தாக சாந்திக்காக தண்ணீர் தொட்டியை தேடி வருவது அப்பகுதியில் வனத்துறை சார்பில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

Related Stories: