வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்

கிருஷ்ணகிரி, ஏப்.18: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்எல்ஏ., மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஜெயசந்திரபானு ரெட்டிக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த 6ம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பதிவான 6 சட்டமன்ற தொகுதிகளின் மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள், கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இந்த இயந்திரங்களின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த, 24 மணி நேரமும் வாக்கு எண்ணும் மையத்திற்குள் வரும் அரசு, தனியார் மற்றும் இருசக்கர வாகனங்களை நுழைவு வாயில் அருகில் உள்ள மைதானத்திற்குள் மட்டுமே நிறுத்த அனுமதிக்க வேண்டும். வேறு எந்த பகுதியிலும் இயக்க அனுமதிக்கக்கூடாது. பிஎச்இஎல் நிறுவனத்தைச் சேர்ந்த பொறியாளர்களையோ, நிறுவனத்தை சேர்ந்த பிற அதிகாரிகளையோ அனுமதிக்கக் கூடாது.

மேலும், 24 மணி நேரமும் கண்காணிப்பு கேமரா இயங்குவதை உறுதி செய்ய வேண்டும். குப்பம் சாலை, சென்னை தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள வைபை, ப்ளூடூத் இணைப்புகளை துண்டிக்க வேண்டும். 24 மணி நேரமும் தங்கு தடையின்றி மின்சாரம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியில் வாக்கு எண்ணும் மையம் இரண்டு அறைகளாக(தலா 7 மேசைகள் வீதம் 14 மேசைகள்) பிரிக்கப்பட்டுள்ளது. அதனை ஒரே அறையில் 14 மேசைகளையும் அமைக்க வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் வெளிப்புற இடது பக்கத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்படவில்லை. அங்கு இரண்டு கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பினை மேலும் பலப்படுத்த வேண்டும். திமுக வேட்பாளரான எனது ஆலோசனைகளை கருத்தில் கொண்டு நடைமுறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு செங்குட்டுவன் எம்எல்ஏ., கூறியுள்ளார்.

Related Stories: