×

கொத்தமல்லி கட்டு ₹20க்கு விற்பனை


ஓசூர், ஏப்.18: ஓசூர் பகுதியில் கொத்தமல்லி விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் சுற்றுப்புற பகுத்தியான கெலவரப்பள்ளி, மத்திகிரி, பாகலூர், பேரிகை மற்றும் சூளகிரி, கெலமங்கலம், தளி, தேன்கனிக்கோட்டை வரையிலும் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் பரவலாக கொத்தமல்லி சாகுபடி செய்துள்ளனர். ஓசூர் பகுதியில் அறுவடை செய்யப்படும் கொத்தமல்லியை சிறு சிறு கட்டுகளாக கட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் விற்பனைக்காக அனுப்பி வைத்து வருகின்றனர். மேலும், வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில், ஓசூர் பகுதியில் வெயில் சுட்டெரித்து வருவதால் கொத்தமல்லி மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சந்தைக்கு வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘கொத்தமல்லி சாகுபடி செலவாக ஏக்கருக்கு ₹25 ஆயிரம் வரையிலும் செலவாகிறது. பயிரிட்ட 40 நாட்களுக்குள் அறுவடைக்கு வந்து விடுகிறது. இதன் மூலம் மிக விரைவில் கைமேல் பலன் கிடைக்க கூடிய ஒரு பயிராக கொத்தமல்லி விளங்குகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு கட்டு கொத்தமல்லி ₹2 முதல் ₹5 வரையிலும் விற்பனையானது. தற்போது, ₹18 முதல் a₹20 வரையிலும் விலை உயர்ந்துள்ளது,’ என்றனர். ஓசூர், தேன்கனிக்கோட்டை பகுதியிலிருந்து கோயம்புத்தூர், திருச்சி, சென்னை, சேலம் உள்ளிட்ட நகரங்களுக்கும், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் தினமும் கொத்தமல்லி அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது, வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மகசூல் குறைந்துள்ளது. இதனால், சந்தைக்கு வரத்து சரிந்துள்ளதால் விலை உயர்ந்து வருகிறது. விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags :
× RELATED பேட்டராய சுவாமி கோயில் தேர்த்திருவிழா