தொப்பூர் கணவாய் இரட்டை பாலத்தில் லாரி மீது கன்டெய்னர் லாரி மோதல்; டிரைவர் படுகாயம்

நல்லம்பள்ளி, ஏப்.18: தொப்பூர் கணவாய் இரட்டைப் பாலம் பகுதியில், லாரி மீது கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் டிரைவர் படுகாயமடைந்தார். இந்த விபத்தால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கர்நாடக மாநிலம், பெங்களூருவில் இருந்து பனியன் துணிகளை ஏற்றி வந்த லாரி, திருப்பூரை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை மேட்டூரைச் சேர்ந்த முத்தலிப் (62) என்பவர் ஓட்டி வந்தார். தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள தொப்பூர் இரட்டைப் பாலம் அருகே, நேற்று காலை 10 மணியளவில் வந்த போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கன்டெய்னர் லாரி, சாலையில் தாறுமாறாக ஓடியது. பின்னர், ஐதராபாத்தில் இருந்து சேலத்திற்கு கற்களை ஏற்றி சென்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் வேகமாக மோதியது. இந்த விபத்தில் கன்டெய்னர் லாரி டிரைவர் இடிபாடுகளில் சிக்கி கொண்டார். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ஊழியர்கள், டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதேபோல், விஜயவாடாவில் இருந்து சேலத்தை நோக்கி சோளம் ஏற்றிக்கொண்டு லாரி வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை திருவாரூரைச் சேர்ந்த கலைவாணன்(37) என்பவர் ஓட்டி வந்தார். நேற்று முன்தினம் இரவு, நல்லம்பள்ளி அடுத்துள்ள தொப்பூர் ஆஞ்சநேயர் கோயில் பகுதியில் உள்ள வளைவை கடக்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலை சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், படுகாயமடைந்த டிரைவரை கலைவாணனை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் 3 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதை போலீசார் சரி செய்தனர். இந்த விபத்துகள் குறித்து வழக்குப்பதிவு செய்து, தொப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: