பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வு விடுமுறை

தர்மபுரி, ஏப்.18: தர்மபுரி மாவட்டத்தில், கொரோனா பரவல் அதிகரிப்பால், பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டு, செய்முறை தேர்வுக்கு மட்டும் வந்து செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு மே மாதம் 5ம் தொடங்குகிறது. 157 தேர்வு மையங்களில் 170 அரசு மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளைச் சேர்ந்த 9498 மாணவர்கள் மற்றும் 9742 மாணவிகள் என மொத்தம் 19,240 பேர் பிளஸ் 2 தேர்வு எழுத உள்ளனர். இந்நிலையில் பிளஸ் 2 மாணவர்களில் அறிவியல் பாடப்பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கான செய்முறை தேர்வு நேற்றுமுன்தினம் தொடங்கியது. வரும் 23ம் தேதி வரை நடக்கிறது. கொரோனா பரவல் அதிகரித்துள்ளதையடுத்து தர்மபுரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் செய்முறை தேர்வு நாளன்று மட்டும், சம்பந்தப்பட்ட பிளஸ் 2 மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்வி அதிகாரிகள் கூறுகையில், ‘கொரோனா பரவல் காரணமாக ஸ்டடி விடுமுறை விடப்பட்டுள்ளது. செய்முறை தேர்வு மேற்கொள்ளும் மாணவர்கள் தவிர, பிற பிரிவு மாணவர்கள், வீட்டில் இருந்தபடியே பொதுத்தேர்வுக்கு படித்து தயார் தயாராக வேண்டும் என்பதற்காக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் செய்முறை தேர்வு எழுதும் ஒவ்வொரு பிரிவு மாணவர்களுக்கும், அவர்களின் கடைசி செய்முறை தேர்வுக்கு அடுத்தநாள் முதல், தேர்வு விடுமுறை வழங்கப்படும். மாணவர்கள் தங்களது வீட்டிலேயே பொதுத்தேர்வுக்கு தயார் செய்துக்கொள்ள அறிவுறுத்தும்படி பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மேலும் ஆசிரியர்களுக்கு சனிக்கிழமை விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது,’ என்றனர்.

Related Stories:

>