விழுப்புரத்தில் பரபரப்பு என்எல்சி ஊழியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை

விழுப்புரம், ஏப். 18: விழுப்புரத்தில் ஓய்வு பெற்ற என்எல்சி ஊழியர் வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் வஉசி அரசு ஊழியர் நகரை சேர்ந்தவர் மதியழகன் (63), ஓய்வு பெற்ற என்எல்சி ஊழியர். இவர் கடந்த 3ம் தேதி வீட்டை பூட்டி விட்டு தனது சொந்த ஊரான ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள வல்லம் கிராமத்திற்கு சென்றார். பின்னர் நேற்று அவர் வீடு திரும்பிய நிலையில், வீட்டின் முன்பக்க கதவு உடைந்திருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மதியழகன், உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் அலமாரியில் வைத்திருந்த 12 கிராம் தங்க நகை மற்றும் ரூ.35 ஆயிரம் பணம் ஆகியவை காணாமல் போயிருப்பது தெரியவந்தது.

இது குறித்து அவர் விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. மேலும், மோப்ப நாய் கொண்டு வரப்பட்டு ஓட விடப்பட்டது. அது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதையடுத்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் விழுப்புரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: