திண்டிவனத்தில் பைக்கில் சென்ற வாலிபரிடம் செயின் பறித்த 2 திருநங்கைகள் கைது

திண்டிவனம், ஏப். 18: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஆவணிப்பூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் தாஸ் மகன் ஹரிராஜன் (26). சம்பவத்தன்று இரவு இவர் திண்டிவனம் மேம்பாலத்தில் இருந்து பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த 2 திருநங்கைகள் திண்டிவனம்- புதுச்சேரி சாலை தீயணைப்பு நிலையம் எதிரே வழிமறித்தனர். பின்னர் அவரை இருட்டு பகுதிக்கு அழைத்துச் சென்று அவர் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு கீழே தள்ளிவிட்டு தப்பி சென்றனர். இது குறித்து ஹரிராஜன் திண்டிவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில், டிஎஸ்பி கணேசன் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை விரைந்து பிடிக்க உத்தரவிட்டார். இதையடுத்து தனிப்படை போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட திருநங்கைகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த பவியா (21), அரியாங்குப்பத்தை சேர்ந்த ரீட்டா மேரி (28) ஆகியோர் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து 2 பவுன் நகையை பறிமுதல் செய்தனர். மேலும் 2 பேருக்கும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories:

>