×

விழுப்புரம் அருகே ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்து மோசடியில் ஈடுபட்ட பெண் கைது ₹5 லட்சம் நகைகள் பறிமுதல்

விழுப்புரம், ஏப்.18: விழுப்புரம் அருகே ஏடிஎம் கார்டு மோசடியில் ஈடுபட்டு வந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. விழுப்புரம் அடுத்த ஆசாரங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை, விவசாயி. இவர்  கடந்த மாதம் 9ம் தேதி விழுப்புரத்தில் உள்ள ஒரு வங்கியில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது, ஏடிஎம் மையத்தில் நின்றிருந்த பெண் ஒருவர் தான் பணம் எடுத்து தருவதாக கூறியுள்ளார். இதனை நம்பிய ஏழுமலை ஏடிஎம் கார்டை அவரிடம் கொடுத்துள்ளார். அந்த பெண், பணம் எடுத்து கொடுத்து விட்டு சென்றுள்ளார்.

சில நாட்கள் கழித்து ஏழுமலை, ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்றபோது ஏடிஎம் கார்டு மூலம் பணம் எடுக்க முடியாததால் வங்கியில் புகார் அளித்துள்ளார். ஏழுமலையின் ஏடிஎம் கார்டை பரிசோதித்த வங்கி அதிகாரிகள், அது போலி ஏடிஎம் கார்டு என்றும், அவரது கணக்கிலிருந்து சிறுக, சிறுக ரூ.5 லட்சத்து 65 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஏழுமலை, விழுப்புரம் குற்றப்புலனாய்வு போலீசில் புகார் அளித்துள்ளார்.
 புகாரின் அடிப்படையில் எஸ்.பி ராதாகிருஷ்ணன் தலைமையிலான தனிப்படை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் திருச்சி கூத்தூர் கிராமத்தை சேர்ந்த சீதாலட்சுமி (40) என்பவர் விவசாயியிடம்  ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்து அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.5 லட்சத்து 65 ஆயிரம் எடுத்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து  ஏடிஎம் கார்டு மூலம் மீண்டும் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஏடிஎம் மையத்தில் சீதாலட்சுமி பணம் எடுக்க வந்த போது டிஎஸ்பி இருதயராஜ் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து 5 லட்சம் மதிப்பிலான 108 கிராம் தங்க நகைகள் மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார்
பறிமுதல் செய்தனர். சீதாலட்சுமி மீது திருச்சி, சமயபுரம், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 14 குற்றவழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Villupuram ,
× RELATED பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை வழக்கு...