×

பிளஸ் 2 செய்முறை தேர்வில் பணியாற்றிய ஆசிரியருக்கு கொரோனா


நாகர்கோவில், ஏப்.18: பிளஸ் 2 செய்முறை தேர்வில் பணியாற்றிய ஆசிரியருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் அன்று தேர்வு கூடத்தில் இருந்த மாணவர்களுக்கு பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வை திட்டமிட்டபடி மே 3ம் தேதி நடத்த பள்ளி கல்வித்துறை தயாராகி வருகிறது. இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை சார்பில் பொதுத்தேர்வின் போது கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளும் வகுக்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், தக்கலை, குழித்துறை, திருவட்டார் ஆகிய 4 கல்வி மாவட்டங்களில் 260 பள்ளிகளை சேர்ந்த 22 ஆயிரத்து 495 மாணவ, மாணவியர் இந்த முறை பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத உள்ளனர். இவர்களுக்கு 84 மையங்களில் பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில் பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் நேற்று முன்தினம் முதல் தொடங்கியுள்ளது. இதில் குளச்சல் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் ஒருவர் கண்டன்விளை அரசு மேல்நிலைபள்ளியில் நேற்று முன்தினம் செய்முறை தேர்வுக்கு அறை கண்காணிப்பாளர் பணியை மேற்கொண்டார். அவருக்கு ஏற்கனவே உடல்நல குறைவு இருந்த நிலையில், கடந்த 15ம் தேதி தனது சளி மாதிரியை பரிசோதனைக்கு கொடுத்திருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து அவர் தேர்வு பணியில் இருந்து நேற்று விடுவிக்கப்பட்டு வேறு ஆசிரியர் தேர்வு பணியில் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே அவர் பணியாற்றிய பள்ளி மற்றும் தேர்வு கூட கண்காணிப்பாளராக பணியாற்றிய பள்ளி ஆகியவற்றில் உள்ள மாணவர்களுக்கும் சளி மாதிரி சேகரித்து பரிசோதனைகள் மேற்கொள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags :
× RELATED பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண்...