திருப்பதிசாரம் ,கிருஷ்ணன்கோவிலில் கோயிலுக்குள் பக்தர்கள் இல்லாமல் சித்திரை திருவிழா கொடியேற்றம் சுவாமி வாகன பவனி ரத்து

நாகர்கோவில், ஏப்.18 : திருப்பதிசாரம் மற்றும் கிருஷ்ணன்கோயிலில் நேற்று திருக்கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா தொடங்கியது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கோயில்களில் திருவிழாக்கள் நடத்த அறநிலையத்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி, குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்களை கொண்டு திருவிழா நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி குமரி மாவட்டத்தில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றான பிரசித்தி பெற்ற திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோயிலில் இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா நேற்று (17ம்தேதி) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 26ம் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடக்கிறது.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இந்த முறை தேரோட்டம், சுவாமி வாகன பவனி இல்லை. பக்தர்கள் அர்ச்சனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே போல் நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற கிருஷ்ணசுவாமி கோயிலில் இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 8 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. வரும் 26ம் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடக்கிறது. வழக்கமாக 9ம் திருவிழாவுக்கு தேரோட்டமும், 10ம் திருவிழா அன்று தெப்ப திருவிழாவும் நடக்கும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு தேரோட்டம் மற்றும் தெப்ப திருவிழா இல்லை. 10ம் நாள் திருவிழா அன்று மட்டும் சுவாமி ஆறாட்டுக்கு கொண்டு செல்லப்படும். பக்தர்கள் ஆங்காங்கே சமூக இடைவெளியுடன் நின்று வழிபாடு செய்யலாம். தேங்காய், பழம் கொடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இரு கோயில்களிலும் நேற்று கொடியேற்ற நிகழ்ச்சியின் போது பக்தர்கள் அனுமதிக்கப்பட வில்லை. வெளியில் நின்றவாறே தரிசனம் செய்தனர். முன்னதாக பக்தர்களுக்கு சானிடைசர் வழங்கி தெர்மல் ஸ்கேன் பரிசோதனை செய்தனர். முக கவசம் இல்லாதவர்களுக்கு முக கவசம் வழங்கப்பட்டது. கொடியேற்று நிகழ்ச்சி முடிந்த பின், சமூக இடைவெளியுடன் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். கிருஷ்ணன்கோயிலில் வழக்கமாக நடைபெறும் கலை நிகழ்ச்சிகள், பக்தி இன்னிசை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Related Stories: