விவசாய சங்கம் வலியுறுத்தல் விவசாயம் பாதிக்கும் அபாயம் புதர்மண்டி கிடக்கும் நாட்டார் கண்மாய் தூர்வார விவசாயிகள் வலியுறுத்தல்

காரைக்குடி, ஏப்.18: காரைக்குடி செஞ்சை பகுதியில் உள்ள நாட்டார் கண்மாய் முழுவதும் ஆகாயத் தாமரை செடி மற்றும் குப்பை குவிந்து கிடப்பதால் தண்ணீர் வீணாகி விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். காரைக்குடி சிறப்பு நிலை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. நிலத்தடிநீரை சேமிக்க 15 க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. இக்குளங்கள் நிறைந்து நகரை சுற்றி உள்ள காரைக்குடி கண்மாய், அதலக்கண்மாய், நாட்டார் கண்மாய், செஞ்சைக்குளம், தெற்கு தெருக்கும் இடையே உள்ள கண்மாய் மற்றும் நெட்டினி கண்மாய்களுக்கு சென்று நிறையும். இந்த  கண்மாய் பாசனத்தை நம்பி 1000 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் உள்ளது. நகரின் வளர்ச்சியால் மழை நீர் வரும் வரத்து கால்வாய்களும், நீர் வெளியேறும் கால்வாய்களும் காணாமல் போய் விட்டது.

வீடுகளில் இருந்து தினமும் 20 லட்சம் லிட்டருக்கு மேல் கழிவுநீர் வெளியேறி வருகிறது. இந்த கழிவுநீர் கண்மாய்களில் தான் போய் சங்கமமாகி வருகிறது. செஞ்சை பகுதியில் உள்ள நாட்டார் கண்மாய் மூலம் பலநூறு ஏக்கர் விவசாயநிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சப்பட்டு வருகிறது. இக்கண்மாய் சமீபகாலமாக ஆகாயத்தாமரை படர்ந்தும், குப்பை கொட்டப்படும் இடமாக மாறி வருகிறது. இதனால் தண்ணீர் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டு விவசாயம் பாதிக்கப்படும் அபாயம் நிலவுகிறது. இதனை தூர்வாரக்கோரி தொழில்வணிகக் கழக தலைவர் சாமிதிராவிடமணி, செயலாளர் கண்ணப்பன் ஆகியோர் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.  

இதுகுறித்து விவசாயி சொக்கநாதன் கூறுகையில், காரைக்குடி பகுதியில் விவசாயத்திற்கு செஞ்சை நாட்டார் கண்மாய், அதலைக்கண்மாய், குரிச்சிகண்மாய், நாச்சுழியேந்தல் கண்மாய் ஆகியவை பயன்படும் வகையில் உள்ளது. செஞ்சை பகுதியில் 350 ஏக்கருக்கு மேல் உள்ள விளைநிலங்களுக்கு செஞ்சை நாட்டார் கண்மாய் மூலமே தண்ணீர் பாய்ச்சப்பட்டு வருகிறது. இக் கண்மாய் முழுவதும் தற்போது ஆகாயத்தாமரை படர்ந்தும், குப்பைகள் நிறைந்தும் காணப்படுகிறது. இதனால் தண்ணீர் வீணாவதோடு விவசாயத்திற்கு மடைகள் மூலம் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இந்த கண்மாயை சுத்தப்படுத்தி, தூர்வாரி பாதுகாக்க வேண்டும் என்றார்.

Related Stories: