×

குடிநீர் கிடைக்காமல் குளத்து தண்ணீரை குடிக்கும் கிராமமக்கள் தொற்று நோயால் அவதி

சாயல்குடி, ஏப்.18:  முதுகுளத்தூர் அருகே ஆத்திக்குளம் ஊராட்சியில் குடிப்பதற்கு குடிதண்ணீரின்றி குளத்தில் கிடக்கும் கலங்கிய, சுகாதாரமற்ற தண்ணீரை குடித்து வருவதாக கிராமமக்கள் புகார் கூறுகின்றனர். முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம், ஆத்திக்குளம் ஊராட்சியில் ஆத்திக்குளம், வாச்சனேந்தல், மொச்சிக்குளம், கடம்பங்குளம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இதில் ஆத்திக்குளத்தில் சுமார் 500 வீடுகளும், வாச்சனேந்தலில் 100 வீடுகளும், மொச்சிக்குளத்தில் 40 வீடுகளும் உள்ளன. இக்கிராமங்களில் காவிரி கூட்டுகுடிநீர் கடந்த 6 மாதங்களாக வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் குளத்தில் கிடக்கும் கலங்கிய தண்ணீர், போர்வெல்லில் வரும் உப்புத்தண்ணீரை குளிக்க, வீட்டு பயன்பாட்டிற்கும், சுகாதாரமற்ற அத்தண்ணீரையே குடிக்கவும் பயன்படுத்தி வருவதாக கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து வாச்சனேந்தல் கிராம மக்கள் கூறும்போது, கிராமத்திற்கு எப்போதாவது வரும் காவிரி கூட்டு குடிநீர் குழாயில் கசியும் தண்ணீரை சுமார் அரை மணிநேரத்திற்கு மேலாக காத்து கிடந்தால் ஒரு குடம் தண்ணீர் மட்டுமே பிடிக்க முடியும் என்ற நிலையில் பிடித்து வந்தோம். ஆனால் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக அந்த தண்ணீரும் முறையாக வருவதில்லை. இதனால் குடிநீர் குழாய்கள், பிளாஸ்டிக் தொட்டிகள் சேதமடைந்து கிடக்கிறது. கடந்த 6 மாதங்களாக கண்மாய், ஊரணியில் கிடந்த தண்ணீரை பயன்படுத்தி வந்தோம். தற்போது கோடை காலம் என்பதால் தண்ணீர் வற்றி விட்டது. இதனால் போர்வெல் மூலம் திறந்து விடப்படும் உப்புத்தண்ணீரை வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தியும், குடிப்பதற்கு டேங்கரில் குடம் ஒன்றிற்கு ரூ.10க்கு வாங்கி குடித்து வருகிறோம் என்றனர்.

ஆத்திக்குளம் கிராமமக்கள் கூறும்போது, குளத்தில் கிடக்கும் சுகாதாரமற்ற தண்ணீரை குடிக்கவும், அதில் துணிகள் சலவை செய்ய, குளிக்கவும் பயன்படுத்தி வருகிறோம். சுகாதாரமற்ற இத்தண்ணீரை குடிப்பதால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை காய்ச்சல், சளி போன்ற தொற்று நோய்களால் அவதிப்பட்டு வருகிறோம். தற்போது கொரோனா தொற்று சளியின் மூலம் தான் பரவி வருகிறது. இந்நிலையில் சுகாதாரமற்ற தண்ணீரை குடிப்பதால் சளி, தொண்டை கரகரப்பு, இருமல் போன்ற தொல்லை ஏற்படுகிறது, அதனை சாதாரண வழக்கமான சளியா அல்லது கொரோனா அறிகுறியா என கூட தற்போது கண்டறிய முடியவில்லை. எனவே இக்கிராமங்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags :
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...