சாலையில் தேங்கிய மணலால் விபத்து

தொண்டி, ஏப்.18:  கிழக்கு கடற்கரை சாலையில் நம்புதாளையிலிருந்து தொண்டி செல்லும் ரோட்டின் இருபுறமும் மணல் நிறைந்து காணப்படுவதால், டூவீலரில் செல்வோர்கள் அடிக்கடி விபத்தில் சிக்க நேரிடுகிறது. இருபுறமும் இருக்கும் மணலை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிழக்கு கடற்கரை சாலை நம்புதாளையில் இருந்து செக்போஸ்ட் வழியாக புது பஸ் ஸ்டாண்டு வரையிலும், ரோட்டில் இருபுறமும் மணல் நிறைந்து காணப்படுகிறது. குறிப்பாக செக்போஸ்ட் பகுதியில் அதிகமான மணல் காணப்படுகிறது. கனரக வாகனங்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நேரங்களில் டூவீலரில் செல்பவர்கள் மணலில் சிக்கி விபத்துக்குள்ளாகி வருகின்றனர். அடிக்கடி சம்பவம் இப்பகுதியில் நடைபெறுவதால் ரோட்டின் இருபுறமும் இருக்கும் மணலை அகற்ற இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து முனியசாமி கூறியது, கிழக்கு கடற்கரை சாலை போக்குவரத்து அதிகமாக உள்ள சாலையாக இருப்பதால் இரவு பகல் எப்பொழுதுமே வாகன நெரிசல் அதிகமாக உள்ளது. ரோட்டின் இருபுறமும் மணல் அதிகமாக உள்ளது. கடந்த வருடம் இப்பகுதியில் மணல் அகற்றப்பட்டது. மீண்டும் மணல் அப்புறப்படுத்தப்படாததால் இருவழி சாலை தற்போது மணல் நிறைந்து ஒரு வழிப்பாதையாக மாறியுள்ளது. இதனால் இப்பகுதியில் அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ரோட்டின் இருபுறமும் இருக்கும் மணலை அப்புறப்படுத்த வேண்டும் என்றார்.

Related Stories: