×

மழையால் ஆயிரம் ஏக்கரில் தக்காளி அழுகி சேதம்

தாராபுரம், ஏப். 18: தாராபுரம் பகுதியில் பெய்த தொடர் மழையால் ஆயிரம் ஏக்கரில் பயிரிட்டிருந்த செடிகளிலேயே தக்காளிகள் அழுகி சேதமாகின. தாராபுரம் அடுத்த கோவிந்தாபுரம், கொட்ட முத்தம்பாளையம், ரஞ்சிதா புரம்,வீராட்சிமங்கலம் உள்ளிட்ட 30க்கும் அதிகமான கிராமங்களில் ஆயிரத்து நூறு ஏக்கரில் தக்காளி பயிரிடப்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு வரை 15 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி 120 ரூபாய்க்கும், ஒரு கிலோ 50 ரூபாய் வரையிலும் விற்பனையானது, இதனால் தக்காளி பயிர் செய்வதில் ஆர்வம் காட்டிய விவசாயிகள் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.10 முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து தக்காளியை பயிரிட்டனர்.

தற்போது தக்காளி விளைச்சல் அமோகமாக இருந்தது. இந்த நிலையில் அன்மையில் தாராபுரம் பகுதியில் தொடர்ந்து நான்கு நாட்களாக பெய்த மழையால் நன்கு விளைச்சல் கண்டிருந்த தக்காளிப் பழங்கள் அனைத்தும் செடியிலேயே வெடித்து அழுகி வருகின்றன. செடிகளும் அழுகும் சூழல் உள்ளது. இதனால் தக்காளிப் பழங்களைப் பறித்து விற்பனைக்கு கூட கொண்டு வர இயலாத சூழ்நிலை ஏற்பட்டு விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக தக்காளி பயிரிட்ட விவசாயிகள் கூறுகின்றனர். பயிரிட்ட நிலத்திலேயே செடியிலேயே பழங்கள் அழுகி விட்டதால் இனி இவற்றை சுத்தப்படுத்த வே ஏக்கர் ஒன்றுக்கு 50 ஆயிரம் வரை செலவிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறும் விவசாயிகள் தக்காளி செடிகளை  நிலத்திலேயே உழுது விட்டு உரமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தக்காளி பயிரிட்டு பாதிக்கப்பட்டுள்ள தங்களுக்கு அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி ஆண்டுவிழா