சமூக இடைவெளி இன்றி சுகாதார பணியாளர்கள் நகராட்சி லாரிகளில் பயணம்

ஊட்டி,ஏப்.18: பொதுமக்களுக்கு சமூக இடைவெளியை பின்பற்றுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நகராட்சி நிர்வாகம் தூய்மை பணியாளர்களை சமூக இடைவெளி இன்றி மினி லாரியில் ஏற்றிச் செல்வது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்றின் 2 அலை காரணமாக தற்போது பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. இதிலிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள சமூக இடைெவளி, முக கவசம் மற்றும் கிருமி நாசினிகளை பயன்படுத்த வேண்டும் என அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, ஊட்டி நகராட்சி நிர்வாகம் இது போன்ற விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. வாகனங்கள் மற்றும் நகரில் பல இடங்களில் ஒலி பெருக்கி வைத்து இது போன்ற பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது.ஆனால், நகராட்சி நிர்வாகம் இதனை முறையாக பின்பற்றுகிறதா என்பது கேள்வி குறியாக உள்ளது. காரணம் பல இடங்களில் தூய்மை பணியாளர்களை சமூக இடைவெளி இன்றி நகராட்சி மினி லாரிகளில் ஏற்றிச் செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது. நான்கு பேர் மட்டுமே வசதியாக நிற்க கூடிய இந்த வாகனங்களில் 10க்கும் மேற்பட்ட ஊழியர்களை நெருக்கமாக ஏற்றி செல்வது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நேற்றும் ஊட்டி நகரில் இருந்து தாவரவியல் பூங்கா வழியாக ராஜ்பவனிற்கு ஒரு மினி லாரியில் ஏராளமான பெண் தூய்மை பணியாளர்களை மினி லாரியில் ஏற்றிச் சென்றது பலரையும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.

Related Stories: