கோவை-திருச்சி ரோடு மேம்பாபணி 80 சதவீதம் நிறைவு

கோவை, ஏப். 18: கோவை-திருச்சி சாலையில் ரூ.250 கோடி செலவில் மேம்பாலம் பணிகள் 80 சதவீதம்  நிறைவடைந்துள்ளன என நெடுஞ்சாலைத்துறை அதிகாரி கூறினார். கோவை-திருச்சி சாலையில் ரூ.250 கோடி செலவில் மேம்பாலம்  கட்டும் பணி கடந்த 2019ம் ஆண்டு துவங்கியது. கோவை-திருச்சி சாலையில் ரெயின்போ பகுதியில் துவங்கி பங்கு சந்தை வரை 3 கிலோ  மீட்டர் தூரத்திற்கு இந்த மேம்பாலம்  கட்டப்பட்டு வருகிறது. இதற்காக மொத்தம் 111  தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மேம்பாலம் 4 வழிப்பாதையாக 17.20  மீட்டர்  அகலத்தில் அமைக்கப்படுகிறது. இதில் சுங்கம் பகுதியில் மட்டும் மேம்பாலத்தின் அகலம் 19.60 மீட்டராக உள்ளது.

இந்த  மேம்பாலம் கட்டும் பணி கடந்த ஆண்டு ஏப்ரல், மே ஆகிய  மாதங்களில் கொரோனா  முழு ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டது. அதன்பின்னர் வேகமாக பணிகள்  மேற்கொள்ளப்பட்டு  வருகிறது. தற்போது இந்த மேம்பாலத்தின் 80 சதவீத பணிகள்   நிறைவடைந்துவிட்டது. மேம்பாலத்தின் இருபுறமும் இறங்குதளம்  அமைக்கும்  பணியும், சுங்கம் பகுதியில் 19.60 மீட்டர் அகலத்திற்கு  மேம்பாலம்  அமைக்கும் பணி மட்டும் தற்போது நடந்து வருகிறது. இது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘கோவை- திருச்சி சாலையில் சிங்காநல்லூரில் இருந்து வரும் வாகனங்கள் உக்கடம் வழியாக  பொள்ளாச்சி, கேரளா செல்ல வசதியாக சுங்கம்-உக்கடம் சாலையில் 400 மீட்டர்  தூரத்திற்கு இறங்கு தளம்  அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக கான்கிரீட்  தூண்கள் அமைக்கும் பணி நிறைவடைந்து விட்டது. 2 வாகனங்கள் செல்லும்   வகையில் 8.50 அகலத்தில் இந்த இறங்குதளம் அமைக்கப்படுகிறது. இந்த மேம்பால பணிகள் அனைத்தும் இன்னும் 3 மாதத்தில் முழுவதும்  முடிக்கப்பட்டு விரைவில் பயன்பாட்டிற்கு திறக்கப்படும். பாலத்தின் இருபுறமும், உக்கடம்  சாலையிலும் இறங்குதளம் மட்டும் அமைக்க வேண்டிய  பணிகள் உள்ளது. இந்த பணி  முடிந்ததும் மேம்பாலத்தின் கீழே  சர்வீஸ் சாலைகள் அமைக்கும் பணி நடைபெறும். இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

Related Stories:

>