×

கொரோனா தொற்று அதிகரிப்பால் மாவட்டத்தில் 2700 படுக்கைகள் தயார்


ஈரோடு, ஏப். 18:  கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், தற்காலிக சிகிச்சை மையங்கள் உருவாக்கப்பட்டு 2700 படுக்கை வசதிகள் தயாராக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஈரோடு கலெக்டர் கதிவரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், 400 படுக்கைகளும், கோபிசெட்டிபாளையம், பவானி, சத்தியமங்கலம், அந்தியூர், பெருந்துறை ஆகிய அரசு மருத்துவமனைகளில் 684 படுக்கைகளும் தயார் நிலையில் உள்ளன. அங்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 186 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

தற்காலிக கொரோனா சிகிச்சை மையங்களாக கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 500 படுக்கைகளும், கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 150 படுக்கைகளும், அந்தியூர் ஐடியல் பள்ளியில் 1,500 படுக்கைகளும், வேளாளர் கல்லூரி விடுதியில் 150 படுக்கைகளும், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 150 படுக்கைகளும், செங்குந்தர் கல்லூரியில் 100 படுக்கைகளும், கூகலூர், நம்பியூர், திங்களூர், சித்தோடு, சென்னிமலை ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலா 30 வீதம் உள்பட மொத்தம் 2 ஆயிரத்து 700 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. லோட்டஸ் மருத்துவமனை 38 படுக்கைகளும், சுதா மருத்துவமனை 104 படுக்கைகளும், அபிராமி மருத்துவமனை 15 படுக்கைகளும், ஈரோடு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை 25 படுக்கைகளும், ஈரோடு எஸ்.கே. மருத்துவமனை 30 படுக்கைகளும், ஈரோடு சி.எஸ்.ஐ. மருத்துவமனை 30 படுக்கைகளும் என 242 படுக்கைகள் தனியார் மருத்துவமனைகளில் தயார் நிலையில் உள்ளது. இவ்வாறு கலெக்டர் கதிரவன் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED ஈரோடு பகுதியில் இன்று மின்தடை