சென்னையில் இருந்து தஞ்சைக்கு ரயில் வேகனில் 1600 டன் யூரியா உரம் வந்தது

தஞ்சை,ஏப்.17: சென்னையில் இருந்து தஞ்சைக்கு ரயில் வேகனில் 1600 டன் யூரியா உரம் வந்தது. தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இது தவிர கோடைகால சாகுபடியும் நடக்கும். தற்போது தஞ்சை மாவட்டத்தில் பல இடங்களில் கோடைகால சாகுபடி நடந்து வருகிறது. நெற்பயிர்களுக்கு தேவையான உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்கள் மூலம் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து உரம் கொண்டு வரப்படும்.

அதன்படி நேற்று சென்னை மணலியில் இருந்து சரக்கு ரெயிலின் 21 வேகன்களில் 1600 டன் யூரியா உரம் தஞ்சை ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. இந்த உர மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை மாவட்டங்களில் உள்ள தனியார் உர விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. கடந்த சில நாட்களாக தஞ்சை மாவட்டத்தில் உரங்கள் தட்டுப்பாடு உள்ளது என விவசாயிகள் குற்றம் சாட்டி வந்தனர். இந்த நிலையில் 1600 டன் உரம் வந்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இதே போல் மத்திய பிரதேசத்தில் இருந்து சரக்கு ரெயிலில் 42 வேகன்களில் 2600 டன் கோதுமை தஞ்சை ரெயில் நிலையத்துக்கு வந்தது. இந்த கோதுமை மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சையில் உள்ள மத்திய சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு இருப்பு வைக்கப்பட்டன. பின்னர் அங்கிருந்து லாரிகளில் எடுத்துச் செல்லப்பட்டு பொது வினியோகத்திட்டத்தின் மூலம் வினியோகிக்கப்பட உள்ளன.

Related Stories: