×

புதுக்கோட்டை ‘டாம்ப்கால்” நிலையத்தில் தினமும் 450 கிலோ வீதம் கபசுர நிலவேம்பு குடிநீர் தயாரிப்பு

புதுக்கோட்டை, ஏப்.17: புதுக்கோட்டையில் உள்ள டாம்ப்கால் மருந்து செய் நிலையத்தில் நாளொன்றுக்கு 450 கிலோ வீதம் கபசுர குடிநீர் மற்றும் நிலவேம்பு குடிநீர் தயாரிக்கப்பட்டு வருவதாக மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்தார்.
புதுக்கோட்டை பழைய அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் டாம்ப்கால் மருந்து செய் நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் உமாமகேஸ்வரி (நேற்று ) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கலெக்டர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக புதுக்கோட்டை பழைய அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் டாம்ப்கால் மருந்து செய் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையத்தில் தினந்தோறும் 450 கிலோ வீதம் கபசுர குடிநீர் மற்றும் நிலவேம்பு குடிநீர் தயாரிக்கப்பட்டு புதுக்கோட்டை உள்ளிட்ட 19 தென்மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

இன்றையதினம் இம்மையத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
கொரோனா நோய் தொற்று காலங்களில் பொதுமக்கள் மற்றும் நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் கபசுர குடிநீர் மற்றும் நிலவேம்பு குடிநீர் தயாரித்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த டாம்ப்கால் மருந்து செய் நிலையத்தின் மூலம் நிலவேம்பு குடிநீர் 9 வகையான சித்த மருத்துவ மூலிகைகளை கொண்டும், கபசுர குடிநீர் 15 வகையான மூலிகைகளை கொண்டும் தயாரிக்கப்படுகிறது. தற்பொழுது இந்நிலையத்தில் 7,000 கிலோ நிலவேம்பு குடிநீரும், 3,000 கிலோ கபசுர குடிநீரும் கையிருப்பில் உள்ளதுடன் ½ கிலோ அளவில் பைகளில் அடைக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் அரசால் தெரிவிக்கப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்தார். இந்த ஆய்வின்போது இணை இயக்குநர் (ஊரக நலப்பணிகள்) ராமு, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் உம்மல் கதீஜா, வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார், பொது சுகாதார துணை இயக்குநர் மரு.கலைவாணி, டாம்ப்கால் சிறப்பு அலுவலர் மரு.மோகன், நகராட்சி பொறியாளர் ஜீவாசுப்பிரமணியன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Tags : Pudukottai ,'Tombcall ,
× RELATED புதுக்கோட்டையில் சுட்டெரிக்கும்...