×

அதிமுக வேட்பாளர்தான் வெற்றி பெறுவார் என கருத்து வாக்குஎண்ணும் மைய பாதுகாப்பு பணியில் இருந்து ஏட்டு விடுவிப்பு

பெரம்பலூர்,ஏப்.17: அதிமுக வேட்பாளர்தான் வெற்றி பெறுவார் என குரும்பலூர் வாக்கு எண்ணும் மைய முகவர்களிடம் பேசிய ஆயுதப்படை போலீஸ் ஏட்டு பாதுகாப்பு பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையம் குரும்பலூர் அரசு கலைஅறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பாதுகாப்புக்கான பணியிலிருந்த பெரம்பலூர் ஆயுதப்படை போலீஸ் ஏட்டு தனவேல்(46) என்பவர், அதிமுக வேட்பாளர் இளம்பை தமிழ்ச்செல்வனுக்கு ஆதரவாக பேசிக்கொண்டும், அவர் திரும்ப வெற்றிபெற்றால் மினிஸ்டர்தான் எனக்கூறி, கண்காணிப்பு பணிகளில் இருக்கும் முகவர்களிடம் தொடர்ந்து பேசி வந்துள்ளார்.

இது குறித்து திமுக வேட்பாளர் பிரபாகரன் சார்பாக திமுக முதன்மை முகவர் ரவிச்சந்திரன், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலரான சப்.கலெக்டர் பத்மஜாவிடம் புகார் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலரான சப்.கலெக்டர் பத்மஜா நடவடிக்கையின் காரணமாக, ஆயுதப்படை போலீஸ் ஏட்டு தனவேல் நேற்றுமுன்தினம் வாக்கு எண்ணும் மைய பாதுகாப்புப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

மேலும் டிஎஸ்பி, ஏடிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளின் கார் டிரைவர்கள் எனக்கூறி வாக்கு எண்ணும் மைய வளாகத்திற்குள் வருவோர் யாராக இருந்தாலும், போலீஸ் யூனிபார்மில் தான் வரவேண்டும் என்று திமுக முகவர் தரப்பில் விடுத்த கோரிக்கையும் ஏற்கப்பட்டு, போலீஸ் யூனிபார்ம் இல்லாமல் டிரைவர்கள் யாரும் வாக்கு எண்ணும் மைய வளாகத்திற்குள் நுழையக்கூடாது என வாய் மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Tags : AIADMK ,
× RELATED சென்னையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தொடங்கியது