தென்னிலை அருகே சாலையோர கடைகள் முன் ஜல்லி ஏற்றிய லாரிகளை நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

க.பரமத்தி, ஏப்.17: தென்னிலை அருகே சாலையோர கடைகள் முன் ஜல்லி லாரிகளை நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி வரும் டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்னிலை சுற்று வட்டார பகுதிகளில் வசிப்பவர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் இப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலைக்கு வந்து பஸ் ஏறி கரூர் உள்ளிட்ட ஊர்களுக்கு சென்று வருகின்றனர். இதில் ஏராளமானோர் இரு சக்கர வாகனங்களில் கரூருக்கு பல்வேறு பணிகளுக்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில் தினமும் காலை, மாலை வேளைகளில் கடைவீதியில் உள்ள தனியார் ஓட்டல்கள், டீக்கடைகள் முன் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் ஜல்லிகள் ஏற்றிய லாரிகளை டிரைவர்கள் நிறுத்திவிட்டு உணவு விடுதிக்கு செல்கின்றனர்.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன், சிறு, சிறு விபத்துகளும் அடிக்கடி நடக்கிறது. இவ்வாறு இடையூறு ஏற்படுத்தும் லாரி டிரைவர்கள் மீது போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தியும், எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. எனவே பெரிய அளவில் அசம்பாவிதம் நடக்கும் முன் விதி மீறி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நிறுத்தப்படும் லாரிகளின் டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>