கொரோனா அதிகம் பரவுவதால் தடுப்பூசி போடுவோர் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரிப்பு சுகாதாரத்துறை அதிகாரி தகவல்

நெல்லை, ஏப். 17: நெல்லை மாவட்டத்தில் தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கோவாக்சின் தடுப்பூசி போதிய அளவு இல்லாத நிலையில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி மட்டுமே போடப்பட்டு வருகிறது. கடந்த 3 மாதங்களாக தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வந்த போதிலும், தடுப்பூசி போடுவோர் எண்ணிக்கை மிகக் குறைந்த அளவிலேயே இருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் தடுப்பூசி போட வருவோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. அனைத்து சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி போட நீண்ட வரிசை உள்ளது.

இதுகுறித்து நெல்லை மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர் வரதராஜனிடம் கேட்ட போது, நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவமனை, கூடங்குளம் மருத்துவமனை, 53 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 10 நகர்ப்புற சுகாதார நிலையங்கள், 20 தனியார் மருத்துவமனைகள் என 86 இடங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

கடந்த ஜன.16ம் தேதி தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அப்போது சராசரியாக தினமும் 1000 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது. இந்நிலையில் தற்போது தடுப்பூசி போடுவோர் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த 3 நாட்களாக ஒரு நாளைக்கு சராசரியாக 3 ஆயிரத்து 300 பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. திடீரென மூன்று மடங்கு பேர் அதிகமாக தடுப்பூசி போட்டுக் கொள்வதால் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இருப்பை பொறுத்து அனைத்து மையங்களிலும் தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகிறது. கூடுதல் தடுப்பூசிகள் அனுப்புமாறு அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: