பள்ளிபாளையத்தில் திராவக தொட்டியில் விழுந்த அலுவலர் பலி

பள்ளிபாளையம், ஏப்.17: நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் காகித ஆலையில் திருச்சியைச் சேர்ந்த கதிரேசன்(35) என்பவர் கடந்த 5 ஆண்டுகளாக மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு கார்த்திகா(32) என்ற மனைவியும், தினேஷ்(13), நிதின்பாலாஜி(8) என்ற மகன்களும் உள்ளனர். மனைவி, குழந்தைகள் திருச்சியில் உள்ள நிலையில், ஆலை விடுதியில் தங்கியிருந்து கதிரேசன் வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில், அதிக சம்பளத்தில் ஆந்திராவில் உள்ள ஒரு காகித ஆலையில் அவருக்கு வேலை கிடைத்துள்ளது. இதனால், தற்போதுள்ள வேலையை வரும் 31ம் தேதியிலிருந்து ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்திருந்தார்.

நேற்று முன்தினம் மதியம் 2 மணி ஷிப்டிற்கு, கதிரேசன் வேலைக்கு சென்றார். மரங்களை அரைத்து கூழாக்கும் பிரிவில் மேற்பார்வை செய்து கொண்டிருந்தார். மரங்களை தூளாக்கி அதை பதப்படுத்தும் நிக்கர் திராவகம் நிரப்பப்பட்ட தொட்டியில் உள்ள கலவையை, அளவுகோல் கொண்டு அளந்து பார்த்துக்கொண்டிருந்த போது, திடீரென அவர் நின்று கொண்டிருந்த இரும்பு பிளாட்பாரம் உடைந்து விழுந்தது. இதில், நிலை தடுமாறிய கதிரேசன், நிக்கர் தொட்டிக்குள் விழுந்து மூழ்கினார். அங்கிருந்த தொழிலாளர்களின் உதவியோடு கதிரேசனை மீட்ட ஆலை நிர்வாகத்தினர், ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், கதிரேசன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த தகவலின்பேரில், பள்ளிபாளையம் போலீசார் விரைந்து சென்று சடலத்தை மீட்டு, பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த அலுவலர்களும், தொழிலாளர்களும் நேற்று காலை பள்ளிபாளையம் காவல் நிலையம் முன் திரண்டனர். இறந்த கதிரேசனின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும். அவரது மனைவிக்கு ஆலை நடத்தும் நிறுவனங்களில் வேலை வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்து முற்றுகை போராட்டத்தில ஈடுபட்டனர். கோரிக்கைகளை ஆலை நிர்வாகம் ஏற்ற பின்பே உடலை பிரேதப் பரிசோதனை செய்ய அனுமதிப்போம் என தெரிவித்தனர்.

இதுகுறித்த தகவலின்பேரில், திருச்செங்கோடு டிஎஸ்பி செல்வம், பள்ளிபாளையம் இன்ஸ்பெக்டர் சாந்தமூர்த்தி ஆகியோர் ஆலை நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதில் நேற்று மாலை உடன்பாடு ஏற்பட்டது. இதில், மரணமடைந்த கதிரேசனின் மனைவி கார்த்திகாவுக்கு வேலை வழங்குவதாகவும், 2 மகன்களின் கல்விச்செலவுக்காக மாதம் தலா ₹3500 வழங்குவதாகவும் உடன்பாடு ஏற்பட்டது. மேலும், கதிரேசனின் மரணத்திற்கு இழப்பீடாக ₹30 லட்சம் கொடுப்பதெனவும், பணிக்காலத்தில் அவருக்கு சேர வேண்டிய அனைத்து தொகைகளையும் முழுமையாக வழங்குவதெனவும் ஆலை நிர்வாகம் ஒப்புக்கொண்டது. காகித ஆலையின் தொழிலாளர்கள் அனைவரும் தங்களது ஒருநாள் சம்பளத்தை கதிரேசன் குடும்பத்திற்கு வழங்க விருப்பம் தெரிவித்தனர். இதையடுத்து கதிரேசனின் உடலை பிரேதப் பரிசோதனை செய்ய அவரது குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த கதிரேசனின் சடலம் நேற்று மாலை சேலம் அரசு மருத்துவமனை பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

Related Stories: