வெளி மாநிலம் செல்லும் லாரி டிரைவர்கள் தாமாக முன்வந்து கொரோனா டெஸ்ட் செய்ய வேண்டும்

நாமக்கல், ஏப்.17:வெளி மாநிலம் செல்லும் லாரி டிரைவர்கள், தாமாக முன்வந்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் மெகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை: நாமக்கல் மாவட்டம் லாரி போக்குவரத்துத் தொழிலில் முன்னோடி மாவட்டமாக விளங்குவதால், லாரி டிரைவர்கள் தங்களுக்கு கொரோனா நோய்த்தொற்று அறிகுறிகளான காய்ச்சல், இருமல், சளி ஆகியவை இருந்தால், உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தற்போது எந்த ஒரு அறிகுறியும் வெளிப்படுத்தாமல், கொரோனா பரவும் நிலை உள்ளதால், வெளிமாநிலங்களுக்கு சென்று வந்த லாரி டிரைவர்கள், தாங்களாகவே அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று, பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

லாரி டிரைவர்களுக்கு உடல் ஆரோக்கியத்தால், நோய்த்தொற்றின் அறிகுறி வெளியே தெரியாவிட்டாலும், வீட்டில் உள்ள முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நோய்த்தொற்றை ஏற்படுத்தி விடக்கூடும். எனவே, காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் கூறியுள்ளார்.

Related Stories: