கொரோனா பரவலை தடுக்க 45 வயதை கடந்த 4 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம்

தர்மபுரி, ஏப்.17: தர்மபுரி மாவட்டத்தில், 45 வயதை கடந்த 4 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளார். தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், கலெக்டர் கார்த்திகா தலைமையில் நேற்று நடந்தது. இதில், டிஆர்ஓ ராமமூர்த்தி, சப் கலெக்டர் பிரதாப், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) ஜெமினி, மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் அமுதவள்ளி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், கலெக்டர் கார்த்திகா பேசியதாவது: கொரோனா நோய்த்தொற்று பரவல் 2ம் அலை முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் முன்னேற்பாடு பணிகள், போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் தற்போது வரை 7372 நபர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டதில், 6789 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

527 பேர் மருத்துவமனைகள் மற்றும் இல்லங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரை 56பேர் இறந்துள்ளனர். மாவட்டத்தில் தினசரி 100 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு, கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இப்பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு, தினசரி 2 இடங்களில் மருத்துவ முகாம்களும், நடமாடும் வாகனங்களில் பல்வேறு இடங்களிலும்  பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுவரை முன்களப் பணியாளர்கள், அரசு அலுவலர்கள், விருப்பம் தெரிவித்தவர்கள் என 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு, கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுதவிர, 45 வயதை கடந்தவர்கள் தோராயமாக 4 லட்சம் பேர் என கணக்கிடப்பட்டு, அவர்கள் அனைவருக்கும், தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால், பல்வேறு இடங்களிலும் குறிப்பாக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், தமிழக அரசின் உத்தரவின்படி, தடுப்பூசிகள் போட மருத்துவ முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து பொது இடங்களிலும், சமூக இடைவெளியை கடைபிடிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, அதை மீறுபவர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ்கள் வழங்கப்படுகிறது. தொடர்ந்து விதிகளை மீறுபவர்கள் மீது, சம்பந்தப்பட்ட கட்டடத்தை மூடி சீல் வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். எனவே, பொதுமக்கள் கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுப்பதற்கு, மாவட்ட நிர்வாகம் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும், முழு ஒத்துழைப்பை தர வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.

Related Stories: