தொப்பூர் அருகே அதிகாரிகள் அலட்சியத்தால் மலைப்பாதையில் மண்சாலை அமைத்த மலைகிராம மக்கள்

நல்லம்பள்ளி, ஏப்.17:  தொப்பூர் அருகே செங்காங்காடு பகுதியில் சாலை அமைக்க பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், சொந்த செலவில் மலைகிராம மக்கள் மண் சாலை அமைத்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டம், தொப்பூர் அடுத்துள்ள கம்மம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட செங்காங்காடு மலை கிராமத்தில், சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கைத்தறி மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களை செய்து வருகின்றனர். இவர்கள் வேலைக்கு செல்லவும், மருத்துவமனைக்கு செல்லவும் சுமார் 2கிலோ மீட்டர் தொலைவு வரை கரடுமுரடான பாதையில் நடந்து சென்றால் தான், அங்கிருந்து பஸ்சில் செல்ல முடியும். இதனால் முத்துபூசாரி ஊரிலிருந்து கோணமடுவுகாடு விநாயகர் கோயில் வரை சாலை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால், பல ஆண்டுகளாகியும் அதிகாரிகள் கண்டு கொள்ளாததால், அப்பகுதி மக்கள் தங்களது சொந்த செலவில் மண் சாலை அமைத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: செங்காங்காடு மலை கிராமத்தில் வேலைக்கு செல்லும் பெண்கள் மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், சுமார்  2கிலோ மீட்டர் தொலைவிலுள்ள சோளியானூர் மற்றும் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தொப்பையாறு டேம் பகுதிக்கு, கரடுமுரடான மலைப்பகுதி வழியாக சென்றால் மட்டுமே, பஸ்சில் ஏறி செல்ல முடியும். ஆனால் வயதானவர்கள், உடல்நலம் சரியில்லாதவர்கள், இந்த மலைப்பாதை வழியாக செல்வது மிகவும் கடினம். எங்கள் பகுதியில் சாலை வசதியில்லை என்பதால், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களை, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு ஆம்புலன்ஸ் கூட வரமுடியாத நிலை உள்ளது. இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களை, கட்டிலில் படுக்க வைத்து, 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சோளியானூர் பகுதிக்கு சுமந்து வந்தால் மட்டுமே, ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு செல்ல முடியும்.

முத்துபூசாரி ஊரிலிருந்து கோணமடுவுகாடு விநாயகர் கோயில் வரையுள்ள கரடுமுரடான மலைப்பாதையை சீரமைத்து, சாலை அமைத்து கொடுக்கும்படி, கம்மம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர், நல்லம்பள்ளி பிடிஓவிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், கிராம மக்கள் ஒன்றிணைந்து, சொந்த செலவில் முத்துபூசாரி ஊரிலிருந்து கோணமடுவு காடுவரை உள்ள மண் சாலையை அமைத்து வருகிறோம். தற்போது பாதி வேலை முடிந்துள்ளது. பொருளாதார சூழ்நிலை காரணமாக, சாலை அமைக்கும் பணியை நிறுத்தி வைத்திருக்கிறோம். எங்கள் கிராமத்தில் இதுவரை அரசாங்கத்திலிருந்து கொடுக்கப்படும் எந்த ஒரு நலத்திட்டங்களும் வந்தது கிடையாது. எந்த அதிகாரிகளும் எங்கள் கிராமத்திற்கு வந்து, இதுவரை எங்கள் குறைகளை கேட்டதும் கிடையாது. இவ்வாறு கூறினர்.

Related Stories: