×

மாமல்லபுரம் அருகே வாகன ஓட்டிகளிடம் அத்துமீறும் போக்குவரத்து போலீசார்

மாமல்லபுரம், ஏப். 17: மாமல்லபுரம் அருகே வாகன ஓட்டிகளிடம் அத்துமீறும் மாமல்லபுரம் போக்குவரத்து போலீசாரை, உயர் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என சமூக ஆர்வலர்கள் சரமாரியாக குற்றஞ்சாட்டுகின்றனர்.
தமிழகத்தை பொறுத்தவரை போக்குவரத்து போலீசாரின் வசூல் வேட்டை தற்போது வரை ஆங்காங்கே நடந்து கொண்டு தான் உள்ளது. விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம், போக்குவரத்து போலீசார் பணமில்லா பரிவர்த்தனை என்ற டிஜிட்டல் முறையில் அபராதம் வசூலிக்க வேண்டும் என்பது விதிமுறை. அபராத தொகையை போலீசார் நேரடியாக வாங்க கூடாது. அதற்கு பதில், 24 மணி நேரத்தில் இ-சேவை மையம், பேடிஎம், கூகுல் பே, போஸ்ட் ஆபீஸ் உள்பட ஆறு வகைகளில் அரசுக்கு அபராத தொகையை செலுத்த வேண்டும். ஆனால், அந்த விதிமுறைப்படி போக்குவரத்து போலீசார், அபராத தொகையை வசூலிக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், மாமல்லபுரம் அடுத்த இசிஆர் - பூஞ்சேரி சந்திப்பில் இருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில் ஒரு சுங்கச்சாவடியும், திருப்போரூர் செல்லும் ஓஎம்ஆர் சாலையில் ஒரு சுங்கச்சாவடியும் உள்ளது. இவ்வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

இதையொட்டி பூஞ்சேரி சந்திப்பில் மாமல்லபுரம் போக்குவரத்து போலீசார், அவ்வழியாக வரும் வாகனங்களை மடக்கி தலைக்கவசம் அணியாமல் வருபவர்கள், கார்களில் சீட் பெல்ட் அணியாமல் வருபவர்கள், அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்களை மடக்கி பிடிக்கின்றனர். ஆனால் போலீசார், அவர்களுக்கு அபராதம் விதிக்காமல் கையூட்டு பெற்று கொண்டு அனுப்புகின்றனர். போலீசாரிடம் கேள்வி கேட்டால், எங்களையே எதிர்த்து கேள்வி கேட்கிறாயா எனக் கூறி ₹2 ஆயிரம் அபாரம் விதிக்கின்றனர். இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைகின்றனர். மேலும் லைசென்ஸ், ஆர்சி புக், இன்சூரன்ஸ் உள்பட அனைத்து ஆவணங்கள் இருந்தாலும், ஏதாவது ஒரு காரணத்தை கூறி, போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கின்றனர். இதுபோன்ற போக்குவரத்து போலீசார் மீது காவல் உயரதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.

Tags : Mamallapura ,
× RELATED மாமல்லபுரம் பூஞ்சேரியில் வசிக்கும்...