×

பைக் மீது லாரி மோதி பெண் பலி: சடலத்துடன் பொதுமக்கள் சாலை மறியல்

செய்யூர், ஏப். 17: பைக் மீது லாரி மோதிய விபத்தில் பெண் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். இதனால் ஆத்திரமடைந்த, அப்பகுதி மக்கள் சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் மேற்கு செய்யூரை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி லட்சுமி (40). இவர்களுக்கு சுமன், நரேஷ் ஆகிய மகன்களும், 17 வயது மகளும் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன், மணி உடல்நிலை பாதிப்பால், சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து லட்சுமி, குடும்பத்தை பராமரித்து வந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக லட்சுமியின் உடல் நலம் பாதித்தது. இதையொட்டி, நேற்று காலை லட்சுமியை, மகன் சுமன் மருத்துவமனைக்கு பைக்கில் அழைத்து சென்றார். செய்யூர் தாலுகா அலுவலகம் அருகில் சென்றபோது, பெரிய வெண்மணி கல்குவாரியில் இருந்து மண் ஏற்றி கொண்டு ஒரு டிப்பர் லாரி வந்தது. லாரியை ஓட்டி வந்த டிரைவர் மணிகண்டன் (30), செல்போனில் பேசி கொண்டே வந்ததாக கூறப்படுகிறது.

அப்போது, திடீரென, முன்னால் சென்ற பைக் மீது லாரி பயங்கரமாக மோதியது. இதனால் தாயும், மகனும் தூக்கி வீசப்பட்டனர். இதில் லட்சுமி, அதே லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி, சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். சுமன், லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதை பார்த்ததும் அப்பகுதி மக்கள் கடும் ஆத்திரமடைந்தனர். சுமார் 500க்கும் மேற்பட்டோர், சம்பவ இடத்தில் திரண்டனர்.  விபத்தில் பெண் இறந்ததை கண்ட ஆத்திரத்தில், லாரியின் கண்ணாடியை அடித்து உடைத்தனர். பின்னர், லாரியை சிறைபிடித்து சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து செய்யூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ‘மண் ஏற்றி செல்லும் டிப்பர் லாரிகளால் இப்பகுதியில் அடிக்கடி விபத்து நடக்கிறது. லாரிகள் தாறுமாறாக செல்வதால் அவதிப்படுகிறோம். எங்களால், சுதந்திரமாக நடமாட முடியவில்லை. இவ்வழியாக லாரிகள் செல்வதற்கு தடை விதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோஷமிட்டனர். அதற்கு போலீசார், ‘சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கிறோம்’ என்று உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

இதையடுத்து போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காகவும், சுமனை சிகிச்சைக்காகவும் மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இதனால் செய்யூர் கிழக்கு கடற்கரை சாலையில் சுமார் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கதறி அழுத மகள்
லட்சுமியின் மகள் படிக்கும் பெண்கள் மேல்நிலை பள்ளி எதிரே விபத்து நடந்தது. அப்போது பள்ளியில் இருந்த மாணவி விபத்து பற்றி அறிந்ததும், சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தார். அங்கு தாய் விபத்தில் சிக்கி சடலமாக கிடந்தை கண்டு தரையில் விழுந்து கதறி அழுதார். மகள் படிக்கும் பள்ளி அருகே விபத்தில் தாய் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

Tags :
× RELATED பள்ளி மாணவியை பலாத்காரம் போக்சோவில் மூன்று பேர் கைது