புதுவை சாரத்தில் சிறுவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபர் அதிரடி கைது மேலும் 2 பேருக்கு வலை

புதுச்சேரி, ஏப். 17:  புதுவையில் சிறுவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றினர். இது தொடர்பாக மேலும் 2 பேரை தேடி வருகின்றனர். புதுச்சேரி சாரம் காமராஜர் சாலை- சுந்தர மேஸ்திரி வீதி சந்திப்பில் வாலிபர் ஒருவர், பள்ளி மாணவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு கஞ்சா விற்பதாக உருளையன்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் சஜீத் தலைமையிலான போலீசார் நேற்று காலை மப்டி உடையில் சென்று அங்கு கண்காணித்தனர். அப்போது ஒரு வாலிபர், கஞ்சா விற்றுக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். விசாரணையில், புதுச்சேரி புதுசாரம் முதலாவது குறுக்கு தெருவை சேர்ந்த தமிழ் என்ற தமிழ்குமரன் (27) என தெரியவந்தது. அவரிடமிருந்து 8 கிராம் எடையுள்ள 80 கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். ஒரு கஞ்சா பொட்டலத்தை ரூ.500க்கு விற்று வந்துள்ளார். தமிழ்குமரனுக்கு அவரது அண்ணன் சுரேஷ், நண்பர் விக்கி ஆகியோர் தமிழ்நாட்டில் இருந்து கஞ்சா வாங்கி வந்து சப்ளை செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள 2 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கஞ்சா விற்ற வாலிபரை பிடித்த இன்ஸ்பெக்டர் சஜீத் தலைமையிலான போலீசாரை எஸ்பி ரக்சனா சிங் பாராட்டினார். தொடர்ந்து, தமிழ்குமரனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>