×

நெல் கொள்முதல் நிலையத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திட்டக்குடி, ஏப். 17:  திட்டக்குடி அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 17 நாட்களாக நெல் கொள்முதல் செய்யாததால், ஆத்திரமடைந்த விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்துள்ள நிதிநத்தம் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு விவசாயிகளின் நெல் மூட்டைகள் 17 நாட்களாக கொள்முதல் செய்யாமல் தேக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கோடை மழையில் விவசாயிகளின் நெல் மூட்டைகள் நனைந்து சேதமாகும் அபாயம் உள்ளது. நெல் மூட்டைகளை விரைந்து கொள்முதல் செய்ய வேண்டும். கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை அதிக அளவு இருப்பு வைத்திருப்பதால் இடப்பற்றாக்குறையும் உள்ளது. அதுமட்டுமின்றி விவசாயிகள் ஏற்கனவே நெல் போடுவதற்கு அடங்கல் கொடுத்துள்ளனர். மீண்டும் கிராம நிர்வாக அலுவலர்களிடமோ அல்லது வேளாண்மை துறை அதிகாரியிடம் அடங்கல் வாங்கி வர வேண்டும் என கூறுகின்றனர். இதனால் விவசாயிகள் நேற்று, நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன்பேரில் விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags :
× RELATED குடும்பத்தகராறில் விபரீதம் கிணற்றில்...