×

7 பேருக்கு கொரோனா தொற்று நாகர்கோவில் மாநகர பகுதியில் மேலும் ஒரு தெருவுக்கு சீல்

நாகர்கோவில், ஏப். 17 :  குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. தினமும் 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  நாகர்கோவில் மாநகர பகுதியில் 25க்கும் மேற்பட்டோர் பாதிப்பில் அடங்குகின்றனர்.  நேற்று முன்தினம் மட்டும் மாவட்டம் முழுவதும் 120 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் நாகர்கோவில் மாநகர பகுதியில் மட்டும் 51 பேர் அடங்குவர்.  வடசேரி கனகமூலம் புதுதெருவில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அந்த பகுதியில் 4 வீடுகளில் உள்ளவர்களின் சளிமாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனை செய்ததில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று கனகமூலம் புதுதெருவில் மாநகர்நல அதிகாரி டாக்டர் கின்சால் தலைமையில்  மாநகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து  கிருமிநாசினி தெளித்தனர். மேலும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள பகுதியை சுற்றியுள்ள 55 வீடுகளில் உள்ள 115 பேரின் சளி மாதிரிகள் எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  ஒரே பகுதியில் 7 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால், அந்த பகுதியில் போலீஸ் உதவியுடன் பேரிகார்டு கொண்டு வரப்பட்டு  அடைத்தனர். கடந்த 4 நாட்களுக்கு முன்பு வல்லன்குமாரவிளை ஹவுசிங்போர்டு காலனியில் 5 வீட்டை சேர்ந்த 8 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு, அந்த பகுதி சீல் வைக்கப்பட்டது குறிப்பிடதக்கது.

 நாகர்கோவில் மாநகர பகுதியில் கொரோனா தொற்று கண்டறியப்படும் இடத்தை சுற்றியுள்ள 60 வீடுகளில் சளிமாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பணி தொடர்ந்து நடந்து வருகிறது. மாநகர பகுதியில் கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால், தொற்றால் பாதிப்போர் அதிகம் கண்டுபிடிக்க வழிவகை ஏற்பட்டுள்ளது. இதுவரை சுமார் 4500 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று முதல் வீடுவீடாக கணக்கெடுப்புநாகர்கோவில் மாநகர பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததை தொடர்ந்து ஆணையர் ஆஷாஅஜித் உத்தரவின்பேரில் வீடுவீடாக விபரங்கள் சேகரிக்கும்பணி இன்று முதல் நடக்கிறது. இது குறித்து மாநகர் நல அதிகாரி டாக்டர் கின்சால் கூறியதாவது: மாநகர பகுதியில் கொரோனா தொற்றை குறைக்கும் வகையில்  வீடுகளில் உள்ளவர்களின் விபரங்களை சேகரிக்கும் பணி இன்று(17ம் தேதி) முதல் நடக்கிறது. இதற்காக கொசு ஒழிப்பு பணியாளர்கள் 308 பேர் ஈடுபடுகின்றனர். அவர்களை சுகாதார ஆய்வாளர்கள் கண்காணிப்பார்கள். ஒருநபர் தினமும் 50 வீடுகளில் விபரங்கள் சேகரிக்க வேண்டும். வீட்டில் எத்தனை நபர்கள் உள்ளார்கள், அவர்களின் ெசல்போன், அவர்களுக்கு காய்ச்சல், சளி மற்றும் சிறுநீர் கோளாறு, இதயநோய் சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்கள் உள்ளதா என கணக்கெடுப்பார்கள். அவர்களிடம் கொடுத்து விடப்படும் படிவத்தில் பூர்த்தி செய்து மாலையில் அந்த அந்த பகுதியில் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார மருத்துவ அதிகாரிகளிடம் கொடுக்க வேண்டும். அவர்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் கொடுப்பார்கள், பின்னர் அந்த விபரம் கலெக்டரிடம் கொடுக்கப்படும். வீடுவீடாக வரும் மாநகராட்சி ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். காய்ச்சல், உடம்புவலி, சளிதொந்தரவு இருந்தால் முதலிலேயே அருகே உள்ள மருத்துவமனைக்கு சென்று உரிய சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

Tags : Nagercoil ,
× RELATED பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை...