தாழக்குடியில் தற்காலிக பாலம் சேதம் கால்வாய்க்குள் இறங்கி சடலத்தை சுமந்து சென்ற பொதுமக்கள்

ஆரல்வாய்மொழி, ஏப்.17: தாழக்குடி  சந்தவிளை சாலையில் புத்தனாறு கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயை கடப்பதற்கு  பழமையான பாலம் உள்ளது.  இந்த பாலம் அகலம் குறைவாகவும், மிகவும்  சேதமடைந்தும் காணப்பட்டதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தது. எனவே  பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்ட வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை  விடுத்தனர். இதன்படி புதிய பாலம் கட்டுவதற்காக கடந்த 2 வாரத்துக்கு முன்  பழைய பாலத்தை இடிக்கும் பணி தொடங்கியது. இதையடுத்து கால்வாயை கடக்க  கம்புகளை கட்டி தற்காலிக பாலம் அமைத்தனர். இதில் மக்கள் நடந்து சென்று  வந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த மழையால் இந்த  தற்காலிக பாலம் சேதமடைந்தது. மேலும் அதில் போடப்பட்டிருந்த தகரத்தை யாரோ திருடி சென்று விட்டனர். இதனால் மக்கள் கால்வாயை கடந்து செல்ல முடியாத நிலை  ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில் நேற்று முன்தினம் அப்பகுதியை சேர்ந்த ஒருவர்  இறந்துவிட்டார். அவரது உடலை கால்வாயின் மறுபக்கம் உள்ள இடுகாட்டில் தகனம்  செய்வதற்காக கொண்டு வந்தனர். பாலம் இடிக்கப்பட்ட நிலையில், தற்காலிக பாலமும் பழுதடைந்து காணப்பட்டதால் சடலத்தை உறவினர்கள் கால்வாயில் இறங்கி தண்ணீரில் கடும் சிரமப்பட்டு எடுத்து சென்றனர்.  எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இந்த பகுதியை பார்வையிட்டு உடனடியாக  பாலம் பணியை செய்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

Related Stories:

>