குப்பைகள் தரம்பிரிக்காமல் தேக்கி வைப்பு திடக்கழிவு மேலாண்மை திட்டம் ‘வேஸ்ட்’

சிவகங்கை, ஏப்.17: சிவகங்கை மாவட்டத்தில் குப்பைகளை மறு சுழற்சி செய்வதற்காக தொடங்கப்பட்ட திடக்கழிவு மேலாண்மை திட்டம் பயனற்ற நிலையில் உள்ளது.  சிவகங்கை மாவட்டத்தில் மூன்று நகராட்சிகள் மற்றும் 12 பேரூராட்சிகளிலும் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நகர் பகுதியில் உள்ள குப்பைகளை சேகரித்து திடக்கழிவு மேலாண்மை திட்ட மையத்திற்கு கொண்டு சென்று அங்கு மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரிக்கப்படுகிறது. மக்காத குப்பைகளை மறு சுழற்சிக்கும், மக்கும் குப்பைகளை உரம் தயாரிக்கவும் பயன்படுத்த வேண்டும். இந்த உரத்தை விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும். ஆனால் இப்படி உரம் தயாரிக்கப்படுவதே விவசாயிகளுக்கு தெரியாது. இதனால் தயாரிக்கப்பட்ட உரங்களும் மீண்டும் குப்பைகளுக்கு வந்து விடுவதால் மாவட்ட அளவில் இத்திட்டம் பெயரளவிலேயே உள்ளது. நகரங்கள், கிராமங்களில் கோழிக்கழிவுகள் ஊருக்கு எல்கையில் கொட்டப்படுகின்றன. இவை எப்போதும் அப்புறப்படுத்தப்படுவதே இல்லை. நகர் பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் ஊருக்கு எல்கையில் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும் மையங்களில் கொட்டி வைக்கப்படுகின்றன. குப்பைகளை தரம் பிரித்து உடனடியாக அப்புறப்படுத்தாமல் ஆண்டுக்கணக்கில் தேக்கி வைப்பதால் துர்நாற்றம் மற்றும் நோய் தாக்குதலால் சுற்றுப்பகுதி கிராமத்தினர் கடும் அவதியடைய வேண்டிய நிலை உள்ளது. இதனால் இம்மையங்களுக்கும் கடும் எதிர்ப்பு உள்ளது.

சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், நகராட்சி பகுதியில் வார்டிற்கு ஒரு குப்பை தொட்டி வைக்கப்படுகிறது. ஒரு வார்டில் 10 தெருக்களுக்கு மேல் உள்ளன. பல தெருக்கள் கடந்து யாரும் குப்பைகளை கொண்டுபோய் கொட்டுவதில்லை. இதனால் ஒவ்வொரு தெருக்களிலும் சாலையோரங்களில் கொட்டுகின்றனர். இவை தினமும் அள்ளப்படாததால் காற்றில் பறந்து தெரு முழுவதும் பரவிக்கிடக்கிறது. இந்த குப்பைகள் அருகில் உள்ள கழிவு நீர் கால்வாய்களிலும் விழுகிறது. இதில் பாலித்தீன் பை போன்றவை கால்வாய்களை அடைத்துக்கொள்வதால் கழிவு நீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது. தெருவிற்கு ஒரு சிமெண்ட் குப்பை தொட்டி ஏன் வைப்பதில்லை என தெரியவில்லை. பாலித்தீன் பைகள் குறித்தும், குப்பைகள் குறித்தும் ஆண்டிற்கு ஒரு முறை பெயரளவிற்கு விழிப்புணர்வு பேரணி நடத்துவதோடு சரி. அதன்பிறகு உள்ளாட்சி அமைப்புகள் இது குறித்து எந்த நடவடிக்கையிலும் ஈடுபடுவதில்லை என்றார்.

Related Stories:

>